சென்னை: தமிழகத்தின் வரலாற்றை முழுமையாகக் கூறும் வகையில் நிர்மலா லஷ்மண் எழுதிய ‘தி தமிழ்ஸ்’ நூல் திகழ்வதாக மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டினார்.
மூத்த பத்திரிகையாளரும் ‘தி இந்து’ குழுமத் தலைவருமான நிர்மலா லஷ்மண் எழுதி, அலெஃப் புக் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘தி தமிழ்ஸ்’ (The Tamils) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வெளியிட்ட இந்நூலை, மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வெ.வேதாச்சலம் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய கோபாலகிருஷ்ண காந்தி, “இந்த நூல் மிகக் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது. ‘அளவு’ என்கிற சொல்லின் எல்லா அர்த்தத்திலும் இந்த நூல் பொருந்தக்கூடியது. ஒரே பேனாவில் காவிரி, தாமிரபரணி, பாலாறு என எல்லா நதிகளும், தமிழின் மொத்த வரலாறும் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்நூல் பதிவுசெய்கிறது. ஆக, தமிழகத்தின் முழுமையான வரலாற்றை இந்த நூல் வழியாக நிர்மலா லஷ்மண் பதிவுசெய்துள்ளார்” என்று பாராட்டினார்.
5 ஆண்டுகள் பயணம்: கல்வெட்டு ஆய்வாளர் வெ.வேதாச்சலம் பேசும்போது, “இந்த நூலின் ஆக்கத்துக்காக நூலாசிரியர் நிர்மலாவுடன் 5 ஆண்டுகள் பயணம் செய்தேன். தமிழகம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளைப் பார்த்தோம். தமிழக வரலாறு எனப் பெயருக்காக எழுதப்படாமல், கள ஆய்வு மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மிகப் பழமையான மாங்குளம் கல்வெட்டைக் கண்டோம். மிகப் பழமையான தமிழ்ப் பிராமி கல்வெட்டான இதை சில தமிழ்க் கல்வெட்டாய்வாளர்கள் பார்த்தது கூட கிடையாது. ஆனால், சிரமத்தையெல்லாம் பொருட்படுத்தாது, நூலாசிரியர் நிர்மலா அந்தக்கல்வெட்டைக் காண மலை மீது ஏறி வந்து பார்த்தது உண்மையில் மறக்க முடியாதது. தமிழ்நாட்டின் முக்கியமான கல்வெட்டுகள், அகழாய்வுகள் எல்லாவற்றையும் பார்வையிட்டு ஆழமாகப் புரிந்துகொண்டுதான் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்” என்றார்.
நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் நிர்மலா லஷ்மண், இந்தப் புத்தகம் எழுதுவதற்கு அவர் மேற்கொண்ட நீண்ட பயணத்தைப் பற்றி விவரித்தார். தன் பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தி அதன் பின்னணியைப் பகிர்ந்தார். மேலும், “மக்களுடனான உரையாடல், பண்டைக் கால ஓவியங்கள், இலக்கியம், கல்வெட்டு ஆகிய பல வழிகளில் தமிழகத்தைப் புரிந்துகொண்டு இதில் பதிவுசெய்துள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்த நூலின் பதிப்பாசிரியர் டேவிட் டேவிதார், நூல் குறித்து அறிமுக உரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக சங்க இலக்கியப் பாடல் ஒன்று நாட்டிய நாடகமாக நிகழ்த்தப்பட்டது.