சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்குவதா, வேண்டாமா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கக்கோரி பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தாக்கல் செய்த இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மனுதாரரான வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் இன்று முறையீடு செய்தார்.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு ரொக்கப்பணம் வழங்கினால் மகிழ்ச்சிதான். ஆனால் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணம் வழங்குவதா, வேண்டாமா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது, எனக்கூறி கோரி்க்கையை ஏற்க மறுத்தனர்.