சென்னை: காணும் பொங்கலையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடற்கரை, பூங்காக்கள், கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையின் நிறைவாக காணும் பொங்கல் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் என்றாலே குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து பொது இடங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று பொழுதுகளை போக்கி மகிழ்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கோயில்களில் நேற்று ஏராளமான மக்கள் குவிந்தனர்.
சென்னை மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை, திருவான்மியூர் போன்ற கடற்கரைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்தனர். பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்தவாறு மக்கள் குடும்பத்துடன் அரட்டை அடித்து, சிற்றுண்டிகள் உண்டு மகிழ்ந்தனர். கூட்ட நெரிசலில் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் பிரிந்து விடும் சூழல் ஏற்பட்டால், அவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் குழந்தைகளின் கைகளில் அடையாள பேட்ஜ்களை போலீஸார் அணிவித்தனர்.
கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பண்ணையில் குழந்தைகளுடன், பெரியவர்களும் விலங்கினங்கள், பாம்பினங்கள், பறவையினங்களைக் கண்டுகளித்தனர். செம்மொழி பூங்கா, கருணாநிதி நூற்றாண்டு பூங்கா, சேத்துப்பட்டு பசுமை பூங்கா உள்பட அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பூங்காவில் இடம்பெற்றிருந்த விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடினர். ஆங்காங்கே பூங்காக்களில் நடைபெற்ற பொங்கல் விழாக்களில் மக்கள் திரளாக பங்கேற்று குழந்தைகளுடன் நேரத்தை போக்கினர். தங்களது வீடுகளில் இருந்து கொண்டுவந்த உணவுகளை பகிர்ந்துண்டு, பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இதேபோல் தீவுத்திடலில் நடைபெற்றும் வரும் 49-வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியிலும் கூட்டம் அலைமோதியது. பொருட்காட்சியில் இடம்பெற்றிருந்த ராட்சத விளையாட்டு சாதனங்கள், சிறுவர் ரயில் பெட்டி, பனிக்கட்டி உலகம், அவதார் உலகம், கடற்கன்னி ஷோ, மீன் காட்சியகம், 3-டி தியேட்டர் போன்றவற்றில் விளையாடி மகிழ ஏராளமான சிறுவர்கள் பெற்றோர்களுடன் வருகை தந்திருந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த உணவு அரங்குகளுக்கும் ஆர்வத்துடன் சென்று விதவிதமான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
வழிபாட்டுத் தலங்கள் - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், கைலாச நாதர் கோயில், ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில், திருவள்ளூர் வீரராகவர் கோயில், திருத்தணி முருகன் கோயில் என பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கிண்டி காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம், பிர்லா கோளரங்கம், எழும்பூர் அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் மக்கள் நிரம்பியிருந்தனர். அதேபோல், திரையரங்குகள், வணிக வளாகங்கள், தனியார் கேளிக்கை பூங்காக்கள் போன்றவை இளைஞர்களால் நிரம்பி வழிந்தன.
சென்னை புறநகர் பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமான வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலும் ஏராளமானோர் குவிந்தனர். நேற்று மட்டும் 20 ஆயிரம் பேர் வருகை தந்திருந்தனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், அர்ஜுனன் தபசு, புலிக்குகை மற்றும் கலங்கரை விளக்கம் ஆகிய சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்கவும் மக்கள் குவிந்திருந்தனர்.
மேலும், கோவளம் கடற்கரை, ஈசிஆர் சாலையில் உள்ள முதலியார் குப்பம், முட்டுக்காடு படகு குழாம் பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வருகை தந்த மக்கள் ஏரிக்கரையில் அமர்ந்து, ஏரியில் உள்ள மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளை கண்டு ரசித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உள்ள பழமையான டச்சு தேவாலயம், கலங்கரை விளக்கம், பறவைகள் காப்பகம் ஆகியவற்றிலும் கூட்டம் அலைமோதியது. பழவேற்காடு ஏரியும், கடலும் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல், பூண்டி நீர்த்தேக்கத்திலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
5 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் - காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர வசதியாக 5 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் கடற்கரை, பூங்காக்கள், கோயில்கள் என சென்னையில் மக்கள் திரளும் அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் மொத்தம் 16 ஆயிரம் போலீஸார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக 1,500 ஊர்காவல் படையினரும் களத்தில் இருந்தனர். ஆங்காங்கே வாகன தணிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.