அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தனது மகன் இன்பநிதியுடன் கண்டு ரசித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழகம்

பிப்.9-ல் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம்: துணை முதல்வர் உதயநிதி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், வரும் பிப்.9-ம் தேதி தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.16) தொடங்கி வைத்தார். மேலும், பார்வையாளர்கள் மாடத்தில் அவரது மகன் இன்பநிதியுடன் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கண்டு ரசித்தார். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு உள்ளிட்ட பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து மதுரையில் இருந்து விமானம் மூலம் உதயநிதி சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி பார்த்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக இருந்தது. எல்லா வருடமும் அங்கு சென்று பார்த்திருக்கிறேன். சிறப்பான ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்த்தது நன்றாக இருந்தது.” என்றார்.

அரசு அமைத்துள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் எப்போது போட்டிகள் நடத்தப்படும் என்ற கேள்விக்கு, “தமிழக அரசு சார்பில் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் நடைபெறும் போட்டி குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். பிப்.9ம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறோம்.” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT