கோவை இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவன்கோந்தி வரையிலான பெட்ரோலிய பைப் லைன் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கோவை இருகூர் ராவத்தூரைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவன்கோந்தி வரை 264 கி.மீ. தொலைவுக்கு ரூ.678 கோடியில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக பெட்ரோலிய பைப் லைன் திட்டத்தை செயல்படுத்த 2023-ல் அறிவி்ப்பாணை வெளியிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ராட்சத எண்ணெய் குழாய்கள் விளை நிலங்களில் பதிக்கப்பட்டு, அதன் வழியாக பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டப் பாதையில் மரங்கள் வளர்க்க முடியாது. 70 அடி அகலத்துக்கு விவசாயம் செய்யக்கூடாது.
அந்தப் பகுதியில் சாலைகள், கோழிப்பண்ணைகள், ஆழ்குழாய்க் கிணறுகள் உட்பட எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. கனரக இயந்திரங்களைக் கொண்டு எந்த வேலையும் செய்யக்கூடாது. நிலத்தில் பதிக்கப்படும் எண்ணெய் குழாய்க்கு சேதம் ஏற்பட்டாலோ அல்லது அவற்றில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்தாலோ, நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும், விளைநிலங்களும் பாதிக்கப்படும்.
ஏற்கெனவே, கொச்சி - கோவை - கரூர் வழித்தடத்தில் பெட்ரோனெட் எனும் பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. தற்போது இருகூர் - தேவன்கோந்தி பைப்லைன் திட்டத்தால் எனது விளைநிலம் பாதிக்கப்படும். இது தொடர்பாக கருத்துகேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான அறிவிப்பாணையையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஏ.எம்.நட்ராஜ், எஸ்.கணேஷ்பாபு ஆகியோரும், மத்திய அரசின் பெட்ரோலியத் துறை சார்பில் வழக்கறிஞர் சி, குழந்தைவேலுவும், தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு ப்ளீடர் ஏ.செல்வேந்திரனும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.