அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு பரிசாக வழங்கப்பட உள்ள கார், டிராக்டர், ஆட்டோ.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி இன்று காலை தொடங்கிவைக்கிறார். வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு, கார், டிராக்டர், ஆட்டோ, பைக், தங்கக் காசுகள் என விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரான மதுரையில் பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மிகவும் புகழ்பெற்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், பாரம்பரியமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தனிச் சிறப்பும், வரவேற்பும் உண்டு.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே போட்டியைக் காண அலங்காநல்லூருக்கு வெளிமாவட்ட மக்கள் வருவது அதிகரித்துள்ளது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். அதனால் இந்த ஆண்டு இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு, அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் விரிவான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

அவனியாபுரத்தில் நேற்ற முன்தினமும், பாலமேட்டில் நேற்றும் ஜல்லிக்கட்டுகள் நடைபெற்ற நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்பது, பார்வையாளர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நடப்பாண்டு 1,000 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள் போட்டியில் களம் இறங்குகின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்று காலை 7 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி தொடங்கிவைத்து, பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்துகிறார். பி.மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். விழா மேடை, விஐபிகள், வெளிநாட்டினர், பார்வையாளர்கள் அமர தனித் தனியாக 1/2 கி.மீ. தொலைவுக்கு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே பிரம்மாண்ட எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மண்டல இணை இயக்குநர் சுப்பையன் தலைமையிலான கால்நடை மருத்துவர்கள் குழு, காளைகளை பரிசோதனை செய்த பிறகே, வாடிவாசலில் அவிழ்த்து விடப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெறும் காளைகளுக்கு தங்கக்காசு, சைக்கிள், அண்டா, பிளாஸ்டிக் சேர்கள், மெத்தை, வேஷ்டி, துண்டு, பட்டுட் சேலை, அயன்பாக்ஸ், ரொக்கம், நாட்டு ஆடு, கோழி போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார், டிராக்டர், இருசக்கர வாகனம், ஆட்டோ போன்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்களும் வழங்கப்பட உள்ளன. கார், டிராக்டர் போன்றவை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி சார்பில் வழங்கப்படுகின்றன. இதையொட்டி, தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆன்ந்த சின்கா மேற்பார்வையில் எஸ்.பி.க்கள் அரவிந்த் (மதுரை), சிவபிரசாத் (தேனி) ஆகியோர் தலைமையில் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT