சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சல் நிலைய சுரங்க நடைபாதையில் அறிவிக்கப்படாத மதுக்கூடம் இயங்கி வருவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரப் பகுதியில் மொத்தம் 22 சுரங்கப் பாதைகள் உள்ளன.
இதில் 16 சுரங்க நடைபாதைகளை மாநகராட்சி நிர்வாகமும், அண்ணா சாலையில் உள்ள சிம்சன், அண்ணா சிலை, தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் உள்ள சுரங்க நடைபாதைகள் உள்ளிட்ட 6 சுரங்கப் பாதைகளை நெடுஞ்சாலைத்துறையும் பராமரித்து வருகின்றன. இதில் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் உள்ள சுரங்கப்பாதை அறிவிக்கப்படாத மதுக்கூடமாக இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ராயப்பேட்டையை சேர்ந்த பார்த்தசாரதி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பிரத்தியேக உங்கள் குரல் தொலைபேசி அழைப்பு எண்ணை தொடர்புகொண்டு தெரிவித்ததாவது: அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகம் பகுதியில் உள்ள சுரங்க நடைபாதை போதிய பராமரிப்பின்றி, துர்நாற்றத்துடன் அசுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ளது.
அருகில் டாஸ்மாக் கடை ஒன்று இருப்பதால், அதில் மதுவை வாங்கிக்கொண்டு சுரங்க நடைபாதையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பின்னர் காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். சில பாட்டில்கள் அங்கு உடைந்து கிடக்கின்றன.
குப்பைகளும் ஆங்காங்கே அகற்றப்படாமல் மழைநீர் தேங்கி சுரங்கப்பாதையே மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் இந்த சுரங்க நடைபாதையில் செல்லவே அருவருப்பாக உள்ளது. எனவே இந்த சுரங்க நடைபாதையை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சுரங்க நடைபாதையை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.