“விஜய்யை ஓரங்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்த நினைக்கிறார் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்” என தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியாகி இருக்கும் ஆடியோ புயலைக் கிளப்பி இருக்கும் நிலையில், பழையவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு ‘பசையுள்ள’ நபர்களை பதவியில் அமரவைக்க துடிப்பதாக புஸ்ஸிக்கு எதிராக அடுத்த புயல் கிளம்பி இருக்கிறது.
“கட்சிக்காக உழைப்பவர்களுக்கும் அந்தக் காலத்தில் சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டியவர்களுக்கும் உரிய அங்கீகாரத்தைத் தரவேண்டும் என விஜய் அறிவுறுத்தி இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் சொல்லி வருகிறார். ஆனால், அதற்கு நேர்மாறான வேலைகளை ஆனந்த் ஊக்குவிக்கிறார் என தவெக-வினர் புலம்புகிறார்கள். கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மீதான ஆனந்தின் அணுகுமுறை தொண்டர்கள் மத்தியில் வெறுப்பை வளர்த்துவருவதாக நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
இருப்பினும் புஸ்ஸி ஆனந்திடம் நெருக்கமாகிவிட வேண்டும், அவரிடம் நல்ல பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக அவர் என்ன சொன்னாலும் நிர்வாகிகள் அதை தட்டாமல் செய்து வருவதாகச் சொல்கின்றனர். மாவட்ட வாரியாக கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்படியான சூழலில், புஸ்ஸி ஆனந்துக்கு காவடி தூக்குபவர்களுக்கு மட்டுமே கட்சிப் பொறுப்புகள் தாரைவார்க்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் பலருக்கும் இருக்கிறது.
இதுகுறித்து பேசிய சென்னை தவெக-வினர் சிலர், ” ‘கட்சிக்காக செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும். தலைவர் பணம் கொடுப்பார் என்றெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது’ என நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாகவே சொல்கிறார் புஸ்ஸி ஆனந்த். கட்சிக்காக லட்சக் கணக்கில் நிதி கேட்பதால் ஆரம்பத்திலிருந்து உழைக்கும் சாமானியர்களை புறந்தள்ளிவிட்டு பசையான பார்ட்டிகளுக்கு பதவிகளை வழங்க அவர் தயாராகிவிட்டதாக தெரிகிறது.
‘படித்தவர்களை மட்டும் கூட வைத்துக்கொள்ளுங்கள்; அவர்களுக்குத் தான் அனைத்தும் தெரியும்’ என கட்சி நிர்வாகிகளுக்கு அட்வைஸ் செய்கிறார் புஸ்ஸி. ஆனால், கட்சியில் அடிமட்டம் வரை இறங்கி வேலை செய்பவர்களில் பலரும் அதிகம் படிக்காதவர்கள் தான். தவெக-வில் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிகம் படிக்காத இளைஞர்களாகத் தான் இருப்பார்கள்.
இவ்வாறு, புஸ்ஸி ஆனந்த் உள்ளொன்றும் புறமொன்றுமாக பேசுவது எங்களுக்கே சங்கடமாக உள்ளது. கட்சிப் பதவிகளுக்காக போட்டிபோடும் நபர்களின் பின்புலத்தை ரகசியமாக கண்காணிக்க ஒரு குழுவையும் புஸ்ஸி ஆனந்த் நியமித்துள்ளார். இவருக்கு பதவி கொடுத்தால் கட்சிக்காக செலவு செய்வாரா, அவர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா, ஒருவேளை, பதவி கொடுக்காவிட்டால் வேறு கட்சிக்குப் போய்விடுவாரா என்றெல்லாம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது புலன் விசாரணைக் குழு.
புஸ்ஸி ஆனந்துக்கு முன்னதாகவே, அதாவது விஜய் நற்பணி மன்றமாக இருக்கும் காலத்திலிருந்தே தளபதியுடன் பயணித்து வரும் நிர்வாகிகள் சிலர், புஸ்ஸி ஆனந்த் சொல்வதற்கு எல்லாம் அவருக்கு முன்னால் தலையை ஆட்டிவிட்டு விட்டு, அவர் போனதும் ‘நானெல்லாம் இவரை விட சீனியர், பதவிக்காக இவர் சொல்வதை எல்லாம் கேட்டவேண்டி இருக்கு’ என்று விமர்சனம் செய்கிறார்கள்.
மாற்றுக் கட்சியில் இருந்து வந்த பலரும் தவெக-வுக்காக செலவு செய்து வருகின்றனர். இவர்கள் எல்லாம் பதவியை எதிர்பார்த்தே பணத்தை இறைக்கிறார்கள். ஆகவே, புஸ்ஸி ஆனந்த் எப்படித்தான் நிர்வாகிகள் பட்டியலைத் தயாரித்தாலும் அது வெளிவந்த பிறகு இன்னொரு பூகம்பம் வெடிக்கத்தான் செய்யும்” என்றனர். இதுகுறித்தெல்லாம் விளக்கம் கேட்டுவிட புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொண்டோம். வழக்கம் போலவே அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை! ஆக, காய்த்த மரம் கல்லடி படத் தொடங்கிவிட்டது!