மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என தமிழக அரசு தரப்பில் அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் மக்களிடம் உறுதி அளித்தனர்.
அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் போராட்டக் களத்துக்கு நேரில் வந்து, டங்ஸ்டன் திட்டம் வராது என்று உறுதியளித்தார். இதையடுத்து, டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுமாறு பல்வேறு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்படுவதாக முறைப்படி அறிவிப்பு, செய்து அதை அரசிதழில் வெளியிட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். அண்ணாமலை லண்டனிலிருந்து திரும்பியபோது, டங்ஸ்டன் திட்டத்தை நல்ல திட்டம் என்று வரவேற்றுப் பேசியுள்ளார்.
எனவே, மத்திய கனிம மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் மூலம் முறையான அறிவிப்பு வந்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிட வேண்டும். வெற்று வாக்குறுதிகளை நம்பக்கூடாது.
மத்திய அரசிடம் அண்ணாமலை பேசி, டங்ஸ்டன் திட்டம் ரத்து குறித்த அறிவிப்பை முறைப்படி அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஆட்சியாளர்கள், இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மற்றும் தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதுவரை, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.