படம்: எஸ்.சத்தியசீலன் 
தமிழகம்

அமைச்சர் சிவசங்கரை கண்டித்து அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவை விமர்சித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை கண்டித்து அதிமுக மகளிரணியினர், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நேற்று கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என அமைச்சர் சிவசங்கர் கூறியதைக் கண்டித்தும் அதிமுக மகளிர் அணி சார்பில், அணியின் மாநில செயலாளர் வளர்மதி தலைமையில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா முன்னிலையில் சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மகளிர் அனைவரும் கருப்பு உடையணிந்து, திமுக அரசுக்கு எதிராகவும், அமைச்சர் சிவசங்கருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியும். கண்ணகி வேடத்தில் நீதி கேட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் வளர்மதி கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட அவல நிலையைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சட்டப்பேரவையிலும், அறிக்கையிலும், பொதுக்குழுவிலும் அரசுக்கு எதிரான உண்மை சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். அது தமிழகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கானது.

அவர் பேச்சுக்கு பதில் அளித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ‘பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக’ என விமர்சித்துள்ளார். பெண் தலைவராக இருந்து நடத்திய கட்சியை, பாலியல் வன்கொடுமைகளின் சரணாலயம் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஒரு அமைச்சர் இதுபோன்று பேசக்கூடாது. பாலியல் குற்றம் செய்த குற்றவாளிகளை காப்பாற்ற திமுக அமைச்சர்கள் ஏன் இவ்வாறு துடிக்கின்றனர்.

திமுகவின் அனுதாபி என்றால், அமைச்சரோடு எவ்வாறு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அமைச்சரோடு எப்படி பிரியாணி சாப்பிட்டார். பாதுகாக்கப்பட்ட பல்கலைக் கழக வளாகத்தில் சுற்றி திரிந்திருக்கிறார் என்றால் அவருடைய செல்வாக்கு என்னவாக இருந்திருக்கும். எனவே, உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி, சரோஜா, ராஜலட்சுமி. முன்னாள் எம்எல்ஏ கனிதா சம்பத். மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT