இதய ஓட்டத்தை கண்காணித்து தானாகவே இயங்கும் அதிநவீன பேஸ்-மேக்கரை பொருத்தும் சிகிச்சையை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி இதய அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் டி.ஆர்.முரளிதரன் நிருபர்களிடம் கூறியதாவது:
இதய நோயாளிகளின் இதயத் துடிப்பை கண்காணித்து தானாகவே சிகிச்சை அளிக்கக்கூடியது ஐ.சி.டி. முறை பேஸ்-மேக்கர் சாதனம். திடீர் மாரடைப்பு ஏற்படும்போது இந்த சாதனம் உடனடியாக இதயத்துக்கு அதிர்ச்சி அளித்து ஒரு டாக்டர் போல சிகிச்சை அளித்துவிடும். சாதாரணமாக பேஸ்-மேக்கரை பொருத்தியிருந்தால் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க முடியாது. ஆனால், இந்த நவீன பேஸ்மேக்கரை பொருத்தினால் உடலின் எந்த பகுதியையும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம்.
சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் இந்த சாதனத்தை இதயத்தில் எளிதாக பொருத்திவிடலாம். ஐ.சி.டி பேஸ்-மேக்கர் சாதனத்தை பொருத்தும் சிகிச்சை ஏற்கெனவே இருந்தாலும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை இந்தியாவில் முதல்முறையாக ராமச்சந்திரா மருத்துவமனையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3 பேருக்கு இந்த சாதனத்தை வெற்றிகரமாக பொருத்தியுள்ளோம். இந்த சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும்.
இவ்வாறு டாக்டர் முரளிதரன் கூறினார்.
இதய அறுவை சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் எஸ்.தணிகாசலம் கூறும்போது, “குறிப்பிட்ட சில மருத்துவ பரிசோதனைகளைச் செய்த பின்னரே இந்த நவீன பேஸ்-மேக்கர் கருவி பரிந்துரைக்கப்படும். தேவை ஏற்படும்போது இந்த கருவி இயங்கும்.
இந்த கருவியின் விலையில் நான்கில் மூன்று பங்கு கட்டணத்தை சிகிச்சை முடிந்து மாதாந்திர தவணையிலும் செலுத்தலாம்” என்றார்.
ஐசிடி நவீன பேஸ்மேக்கர் கருவி பொருத்தி சிகிச்சை பெற்ற சென்னை போரூரைச் சேர்ந்த சுந்தர் கூறும்போது, “சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மூலம் இந்த பேஸ்-மேக்கர் கருவியை பொருத்தினார்கள். இதய துடிப்பு அசாதாரணம் அடையும்போது இந்த பேஸ்-மேக்கர் கருவி தானாகவே கண்டறிந்து சிகிச்சை அளித்துவிடும் என்பதால் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்றார்.