மதுரை: மேலூர் பகுதியில் டங்ஸ்டன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள 4979 ஏக்கர் பரப்பளவிலும் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது. இதை மத்திய அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வல்லாளப்பட்டி மந்தை திடலில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மேலூர் பகுதியில் 4,979 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் நடந்த இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தெரிவித்தோம். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பிறகும் போராட்டம் தொடர்கிறது.
2 நாட்களுக்கு முன்பு மேலூரிலிருந்து மதுரைக்கு 18 கிலோ மீட்டர் நடைபயணமாக சென்று அறவழியில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் மக்களை சந்திக்க வந்துள்ளோம். மாநில அரசு ஆட்சேபனை தெரிவிக்காததால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு டெண்டர் விட்டது. 2024 பிப்ரவரில் முதலில் டெண்டர் கோரப்பட்ட போது யாரும் டெண்டர் எடுக்கவில்லை. இதனால் 2-வது முறையாக டெண்டர் விடப்பட்டது. அப்போது இந்துஸ்தான் ஜிங் நிறுவனம் டெண்டர் எடுத்தது. இருப்பினும் அரசியலை தாண்டி மக்கள் வேண்டாம் என்பதால் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. மக்களின் கோரிக்கையை ஏற்று சுரங்க திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த சுரங்கத்தால் மத்திய அரசுக்கு ஒரு பைசா லாபம் இல்லை. மாநில அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தான் வருவாய் கிடைக்கும். டெண்டர் வழங்குவது மட்டுமே மத்திய அரசு. மற்றபடி சுரங்க உரிமம் வழங்குவது, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது மாநில அரசு தான். அவற்றை கொடுக்க வேண்டாம் என மாநில அரசிடம் மத்திய அரசு கூறிவிட்டது.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஜன. 17, 18, 19 தேதிகளில் சென்னை வருகிறார். அப்போது டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்பட்டதை அறிவிப்பார். இல்லாவிட்டால் போராட்டக் குழுவில் 5 பேர் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு அமைச்சரை நேரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும். மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4,979 ஏக்கர் பரப்பளவில் எங்கும் டங்ஸ்டன் சுரங்கம் வராது. இதை மத்திய அமைச்சர் சொல்வார். இதனால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
மக்கள் அறவழியில் நியாயமாக போராடி உள்ளனர். ஒரு பைசா அளவில் கூட சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தவில்லை. போலீஸாருடன் சண்டை செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். டங்ஸ்டன் சுரங்கம் காரணமாக மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 4,979 ஏக்கர் பரப்பளவில் சொத்து வாங்கவோ, விற்கவோ வில்லங்க சான்றிதழ் வழங்குவது லாக் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த லாக் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிமேல் இப்பகுதியில் மக்கள் நிலம் வாங்கும், விற்கும் உரிமை வந்துள்ளது. இனிமேல் கனிம வளம் தொடர்பான டெண்டர் விடும்போது மத்திய அரசு கேட்கும்போது மாநில அரசு சரியான தகவல்களை வழங்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ளது போன்ற குழப்பம் இனிமேல் ஏற்படக்கூடாது. மத்திய அரசு கேட்கும் போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தால் மத்திய அரசு டெண்டர் விட்டிருக்காது.
மாநில அரசு கடைசியாக பிப்.8, 2024-ல் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இப்பகுதியில் 477 ஏக்கர் மட்டும் பல்லுயிர் தளம். மற்றப் பகுதியில் பல்லுயிர் தளங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் சுரங்கம் நடத்த ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இந்த கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இது தான் குழப்பத்துக்கு காரணம். பின்னர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பேசியுள்ளார்.
மேலூர் பகுதி மக்கள் தற்போது டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது போல் மேலூர் பகுதியையும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது நியாயமான கோரிக்கை. இந்த கோரிக்கையை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இப்பகுதி பல்லுயிர் தளத்தை தாண்டி நீர்ப்பாசனப் பகுதி, ஆண்டாண்டு காலம் மக்கள் வாழும் பகுதி, இனிமேல் நீர்பிடிப்பு, பாசன வசதி உள்ள இடங்களில் தொழிற்சாலைகள் கொண்டு வரக்கூடாது. மக்களின் கோரிக்கைக்கு உடனிருப்போம்.
மாநில அரசு மத்திய அரசுக்கு 2021 செப்டம்பர் 14-ல் அளித்த புவியியல் அறிக்கையில் மேலூர் முத்துவேல்பட்டியில் முழுமையாக டங்ஸ்டன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பேரில் 2024 பிப். 8-ல் மத்திய அரசுக்கு கருத்து அனுப்பியுள்ளது. 2023 ஆகஸ்ட் மாதம் வரை டங்ஸ்டன் போன்ற கனிமங்களுக்கான ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசிடம் தான் இருந்தது. 2023 ஆகஸ்ட் 17-ல் தான் அந்த அதிகாரம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது. அதற்கு முன்பு புவியியல் அறிக்கை மாநில அரசிடம் தான் இருந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும்” என்று அண்ணாமலை கூறினார்.