தமிழகம்

கோவையில் சீமான் மீது 9 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு

டி.ஜி.ரகுபதி

கோவை: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 9 காவல் நிலையங்களில் போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் குறி்த்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் பெரியாரிய இயக்கங்கள் சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன. அதன்படி, கோவையில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 7 பெரியாரிய இயக்கங்கள் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடமும் நேற்று (ஜன.09) புகார்கள் அளிக்கப்பட்டன. அது தவிர, கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் அந்தந்த பகுதி நிர்வாகிகள், இயக்கத்தினர் மூலம் சீமான் மீது புகார்கள் அளிக்கப்பட்டன.

அதன்படி, மாநகரில் தபெதிக மாநில ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆறுச்சாமி சுந்தராபுரம் போலீஸாரிடமும், வெள்ளலூரைச் சேர்ந்த பிரபாகரன் போத்தனூர் போலீஸாரிடமும், ரேஸ்கோர்ஸைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன் பேரில், சுந்தராபுரம், போத்தனூர், ரேஸ்கோர்ஸ் போலீஸார் சீமான் மீது இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டுதல், பொய்யான தகவல்களை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இன்று (ஜன.10) வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி கிழக்கு, ஆனைமலை, மகாலிங்கபுரம், தடாகம் ஆகிய 6 காவல் நிலையங்களிலும் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் சீமான் மீது போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT