மதுரை: பெரியாருக்கு எதிராக அவதூறாக பேசிய சீமான் மீது திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை தல்லாகுளம், திருமங்கலம் காவல் நிலையங்களில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2 நாளுக்கு முன்பு கடலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததால் திராவிடர் கழகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் திராவிட கழகத்தினர் புகார் அளித்தனர்.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் திராவிடர் கழக மதுரை நகர தலைவர் முருகானந்தம் தலைமையில் மாநில அமைப்பாளர் செல்வம், வழக்கறிஞர் கணேசன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். அந்த புகாரில், ‘பெரியார் சொல்லாத கருத்துக்களை ஆதாரம் இல்லாத நிலையில் சீமான் பேசியுள்ளார். சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும், சமூகப் பதற்றம், வன்முறையைத் தூண்டும் நோக்கிலும் திட்டமிட்டு அவதூறாக பேசி இருக்கிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் சீமான் மீது வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் மதுரை புறநகர் பகுதியில் திருமங்கலம், பேரையூர், விக்ரமங்கலம் காவல் நிலையங்களிலும் சீமானுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. திருமங்கலம் காவல் நிலையத்திலும் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.