‘200 தொகுதிகளில் வெற்றி’ என்ற முழக்கத்துடன் திமுக 2026 தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டது. இந்த நேரத்தில் திமுக-வை அதிரவைக்கும் வகையில் அதன் கூட்டணிக் கட்சிகள் ‘அட்டாக்’ அரசியலில் குதித்துள்ளன. 2011 வரை கூட்டணி கட்சிகளின் தயவுடனேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் நடந்தன. ஆனால், 2016 தேர்தல் சிறு கட்சிகளுக்கு போறாத காலம் என்றே சொல்லலாம். ஏனெனில், 2016 தேர்தலில் தமிழக சட்டமன்றத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் என 4 கட்சிகள் மட்டுமே இடம்பெற்றன. அப்போது கருணாஸ் உள்ளிட்ட சிலரை கூட்டுச் சேர்த்துக் கொண்டு 234 தொகுதிகளிலும் தனித்தே நின்றது அதிமுக.
திமுக-வும் காங்கிரசும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள், விசிக, மதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ‘மக்கள் நலக்கூட்டணி’ அமைத்து தோற்றன. ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியை கெட்டியாக பிடித்துக்கொண்டன.
இந்தக் கட்சிகளுக்கு 2021 சட்டமன்றத் தேர்தலில் தலா 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது திமுக. ‘பாசிச பாஜக உள்ளே வரக்கூடாது’ என்ற நிலைப்பாட்டால் இதற்கும் அந்தக் கட்சிகள் சம்மதித்தன. அதேசமயம், 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 10 தொகுதிகளும், அதிமுக கூட்டணியில் மார்ச்சிஸ்ட்டுக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
அப்படியானால் பத்து வருடத்தில் இவர்களின் வலிமை குறைந்துவிட்டதா என்ற விமர்சனங்களும் கிளம்பின. அதனால் இந்த முறை திமுக கூட்டணிக் கட்சிகள் முன்னதாகவே விழித்துக் கொண்டுவிட்டன. அதனால் தான் ‘தோழமை சுட்டுதல்’ பாணியை கைவிட்டு ‘தோழமை குட்டுதல்’ வியூகத்தில் இறங்கியுள்ளன அந்தக் கட்சிகள்.
2026 தேர்தலில் இப்போதுள்ள சூழலில் இக்கட்சிகளால் வேறு எந்த அணிக்கும் செல்ல முடியாது என்பது நிதர்சனம். ஆனால், அந்த எண்ணத்தை தகர்ப்பதற்காகவே பாஜக-வை கழட்டிவிட்டு, திமுக கூட்டணிக் கட்சிகளுக்காக ‘பர்த் சீட்’ போட்டு கூட்டணி பேருந்தை தயாராக வைத்திருக்கிறது அதிமுக. அதைத் தெரிந்து கொண்டுதான் துணிந்து ஆட ஆரம்பித்திருக்கிறார்கள்.
25 தொகுதிகள் வேண்டும் என அதிரவிட்ட விசிக ஆகட்டும், தமிழ்நாட்டில் எமர்ஜென்சி ஆட்சி நடக்கிறதா என பதறவிட்ட மார்க்சிஸ்ட்டுகள் ஆகட்டும், கூட்டணி கட்சிகளை திமுக மதிப்பதே இல்லை என சிதறவிட்ட வேல்முருகன் ஆகட்டும் எல்லோருக்கும் ஒரே இலக்குதான். சட்டமன்றத்தில் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.
அதற்கேற்ப, இப்போது அண்ணா பல்கலை. மாணவி விவகாரம், டங்ஸ்டன் போராட்டம் என லைம் லைட்டிற்கு வந்துள்ளது அதிமுக. விஜய் கட்சியும் அதிமுக-வுடன் கைகோக்கலாம் என்ற பேச்சும் உள்ளது. எனவே, திமுக அணியில் ‘வேண்டா விருந்தாளி’யாக கொடுத்ததை வாங்கிக்கொண்டு இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்தே இந்த ‘அட்டாக்’ அரசியலை திமுக கூட்டணிக் கட்சிகள் கையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். மீண்டும் வெற்றி என்ற கனவோடு மு.க.ஸ்டாலினும், மீண்டு வந்து வெற்றி என்ற கணக்கோடு இபிஎஸ்சும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். உதிரிக் கட்சிகள் யாரை ஜெயிக்க வைக்கிறார்கள் என்று பார்ப்போம்!