தமிழகம்

ராஜேந்திர பாலாஜியை காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய ஐகோர்ட்!

அ.கோபால கிருஷ்ணன்

“போலீஸாருக்கு நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்த நேரமில்லாத காரணத்தால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறேன்” முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட மோசடி வழக்கின் தொடர் விசாரணையில் தான் ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் இப்படி அதிரடி காட்டி இருக்கிறார்.

அ​திமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.​ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்​கொண்டு ஏமாற்றி​விட்டதாக அதிமுக நிர்வாகியான ரவீந்​திரன் என்பவர் 2021 நவம்பர் 15-ல் விருதுநகர் குற்றப்​பிரிவு போலீஸில் புகார் அளித்​தார். அதன் அடிப்​படையில் அதிமுக-வைச் சேர்ந்த விஜய் நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்​பட்டது.

அதேநாளில், சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜி​யிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவானது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தலை மறை​வா​னார்.

18 நாள் தேடல்​களுக்குப் பிறகு 2022 ஜனவரி 5-ல் கர்நாடக மாநிலத்தில் வைத்து தமிழக போலீஸார் அவரைக் கைது செய்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை கடந்து​விட்ட நிலையில் இந்த வழக்கில் எந்த முன்னேற்​றமும் இல்லை. 2023 ஜனவரியில் குற்றப்​பத்​திரிகை தாக்கல் செய்யப்​பட்டது.

அதன் பிறகு, விசாரணை நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்​தல்படி மீண்டும் இரண்டாவது குற்றப்​பத்​திரிகை கடந்த பிப்ர​வரியில் தாக்கல் செய்யப்​பட்டது. ஆனால், அது பதிவு செய்யப்​பட​வில்லை. இதனிடையே, முன்னாள் அமைச்சர் என்பதால் ராஜேந்திர பாலாஜி​யிடம் விசாரணை நடத்த ஆளுநர் அனுமதிக்கு காத்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்​கப்​பட்டது.

இந்நிலை​யில், இந்த வழக்கில் குற்றப்​பத்​திரிகை தாக்கல் செய்யக் கோரி ரவீந்​திரன் உயர் நீதிமன்​றத்தை நாடினார். ஆனால், நீதிமன்றம் உத்தர​விட்டும் போலீஸார் முறையான குற்றப்​பத்​திரிகையை தாக்கல் செய்ய​வில்லை. அந்த ஆதங்கத்தில் தான் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி இருக்​கிறார் நீதிபதி.

இதுகுறித்து ரவீந்​திரனை தொடர்பு கொண்டு பேசினோம். “வழக்கு நீதிமன்​றத்தில் இருப்​பதால் எதுவும் பேசமுடி​யாது” என்றார். விஜய் நல்லதம்​பியோ, “அனுமதி பெறுவது உள்ளிட்ட நிர்வாக காரணங்​களால் விசாரணையை தொடங்​கு​வதில் காலதாமதம் ஏற்பட்​டுள்ளது. என்னைப் பொறுத்தவரை வேலைக்கு பணம் கொடுத்​தவர்​களிடம் அஃபிடவிட் பெற்று நீதிமன்​றத்தில் தாக்கல் செய்துள்ளேன்” என்றார்.

இந்த வழக்கை ஆரம்பம் முதலே கண்காணித்து வரும் சிலரோ, “ஆட்சியில் இருந்த போது திமுக-வுக்கு எதிராக வன்முறை பேச்சுகளை உதிர்த்தவர் ராஜேந்திர பாலாஜி. அப்படிப்​பட்டவரை சட்டத்தால் தண்டிக்க இந்த வழக்கை திமுக அரசு சரியான ஆயுதமாக பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால், அதைச் செய்ய​வில்லை. மாறாக, அவரை தப்பிக்க வைப்ப​தற்கான அனைத்து வேலைகளையும் செய்திருக்​கிறார்கள். சாட்சிகள் கூட அவருக்கு சாதகமான நபர்களைத்தான் போட்டிருக்​கிறது போலீஸ்.

ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் வந்து​விடக்​கூடாது என்பதற்​காகத்​தான், வழக்கை சிபிஐ விசாரிக்கும் என நீதிமன்றம் சொன்ன பிறகு பதறிப்​போய், நாங்களே விசாரிக்​கிறோம் என கோர்ட்டில் முறையிட்​டிருக்​கிறது போலீஸ்.

எல்லாமே, உன்னை நான் பாத்துக்​கிறேன்; என்னை நீ பாத்துக்கோ என்ற கணக்காகத்தான் இருக்​கிறது” என்கிறார்கள். இந்த வழக்கு மட்டுமல்ல, “ஆட்சிக்கு வந்தால் சும்மா விடமாட்​டோம்” என்று திமுக தலைவர்களால் எச்சரிக்​கப்பட்ட பலபேர் சம்பந்​தப்பட்ட வழக்கு​களும் இப்படித்தான் ‘கவனிக்கப்படாமல்’ இழுபட்டுக் கொண்டிருக்​கிறது!

SCROLL FOR NEXT