தமிழகம்

விவகாரமாகும் விஜய் - அண்ணாமலை மார்ஃபிங் பட விவகாரம்: பின்னணி என்ன?

ரெ.ஜாய்சன்

தவெக தலைவர் நடிகர் விஜய்யும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை யூடியூப் சேனல் ஒன்று மார்ஃபிங் செய்து அண்மையில் வெளியிட்டது. அதில், ரங்கசாமியின் படத்துக்குப் பதிலாக பாஜக தலைவர் அண்ணாமலையின் படத்தை வைத்து மார்ஃபிங் செய்திருந்தார்கள். இந்த வீடியோ வெளியானதை அடுத்து, பாஜக-வுக்கு ஆதரவாகவே விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டன.

இதையடுத்து தூத்துக்​குடியைச் சேர்ந்த தவெக நிர்வாகியான காந்தி​ம​தி​நாதன் என்பவர் போலீஸில் புகாரளித்​தார். போலீஸ் கண்டு​கொள்​ளாததால் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இது தொடர்பாக காந்தி​ம​தி​நாதன் ஜனவரி 20-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் புதுக்​கோட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அதன்மீது போலீஸார் விசாரணை நடத்தி 2 மாதத்தில் நீதிமன்​றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக காந்தி​ம​தி​நாதனிடம் பேசினோம். “அண்ணா​மலை​யுடன் எங்கள் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் இருக்​கக்​கூடிய புகைப்​படத்தை பலரும் எனக்கு அனுப்பி, ‘இது உண்மையாக இருக்​குமோ, லண்டனில் வைத்து சந்தித்​தார்​களா?’ என்றெல்லாம் கேட்டார்கள். இருவரும் அண்ணா​மலையை லண்டனில் சந்தித்​த​தாக​வும், சுதாகர் ரெட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்​தாகவும் பலர் என்னிடமே கூறினார்கள்.

நடக்காத ஒரு விஷயத்தை இப்படிப் பரப்பு​வதால் கட்சிக்​கும், தலைவருக்கும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் முதலில் தூத்துக்குடி சைபர் க்ரைமில் புகாரளித்​தேன். அந்த வீடியோவை உடனே நீக்க வலியுறுத்​தினேன். ஆனால், அவர்கள் புதுக்​கோட்டை ஸ்டேஷனில் புகாரளிக்கச் சொன்னார்கள். அங்கும் சென்று புகாரளித்​தேன். அதற்கும் நடவடிக்கை இல்லாததால் தான் கோர்ட்டுக்குப் போனேன்.

இந்த விஷயத்தில் கோர்ட் தலையிட்ட பிறகும் அந்த வீடியோ பரவி வருகிறது. ‘விஜய்யின் கைங்கரி​யத்தைப் பாருங்கள்’ எனக் கூறி இரண்டு தினங்​களுக்கு முன்பும் அதே வீடியோ முகநூலில் பகிரப்​பட்​டுள்ளது. அரசியல் காழ்ப்பு​ணர்சியே இதற்கெல்லாம் காரணம். விஜய்யை அசிங்​கப்​படுத்த வேண்டும், அவரை வளரவிடக்​கூடாது என்பது தான் இவர்களது நோக்கம்.

வீடியோவை நீக்கும்படி போலீஸார் இதுவரை அந்த யூடியூப் சேனலுக்கு நோட்டீஸ் கொடுக்க​வில்லை. அரசுக்கு எதிராகவோ, திமுக-​வுக்கு எதிராகவோ சமூகவலை​தளங்​களில் யாராவது கருத்து வெளியிட்​டால், அவர்கள் மீது காவல் துறை உடனடியாக வழக்கு பதிவு செய்வதுடன் உடனே கைதும் செய்கிறார்கள். அதுவே, மற்றவர்கள் புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்​பினார் அவர். விசாரணை அறிக்கையை பார்த்து நீதிமன்றம் குட்டு​வைப்​ப​தற்கு முன்பாக​வாவது ​போலீஸார் உரிய நட​வடிக்கை எடுக்​கட்​டும்​!

SCROLL FOR NEXT