தமிழகம்

கோவைக்கு ஜாகை மாறிய அண்ணாமலை! - திமுகவுக்கு போட்டியாக களைகட்டும் கொங்கு பாஜக

ஆர்.ஆதித்தன்

பொதுவாக ஒரு கட்சியில் மாநில தலைவராக இருப்பவர்கள் தலைநகரில் இருந்துதான் அரசியல் செய்வார்கள். பாஜக தலைவர் அண்ணாமலையும் முன்பு அப்படித்தான் இருந்தார். ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் தனது ஜாகையை மெல்ல மெல்ல கோவைக்கு மாற்றி வருகிறார். அண்மையில் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்தியதுகூட கோவையில் தான்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை சுமார் 4 லட்சம் வாக்குகளைப் பெற்றார். இது அவருக்கு புது நம்பிக்கையைக் கொடுத்தது. ஒருவேளை, அப்போது அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அண்ணாமலை கோவையில் வென்று இப்போது மத்திய அமைச்சராகக் கூட இருந்திருக்கலாம். இந்தக் கணக்குத்தான் அவரை கோவையை மையப்படுத்தி அரசியல் செய்ய வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், சென்னையை விட்டுவிட்டு அண்ணாமலை கொங்கு அரசியலுக்கு திரும்பி இருப்பது ஏற்கெனவே இந்த மண்டலத்தில் தனித்த செல்வாக்குடன் வளர்ந்து வரும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரை சற்றே சிந்திக்க வைத்திருக்கிறது. இதுவரை வானதி சீனிவாசனை சுற்றியே இருந்த கோவை பாஜக நகர்வுகள் இப்போது அண்ணாமலையை மையம் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்

இதுகுறித்து பேசிய கோவை பாஜக புள்ளிகள் சிலர், “கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் அதிமுக-வுக்கு எத்தனை செல்வாக்கான பகுதியோ அதேபோல் பாஜக-வுக்கும் இங்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அதனால் தான் 2021-ல் கோவை தெற்கில் வானதி சீனிவாசன் வெற்றிவாகை சூடினார்.

அதன் பிறகு வானதியின் அரசியல் கிராஃப் உயர ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒரு தலைவர் அந்தஸ்துக்கு அவரது அரசியல் செயல்பாடுகள் மாறிப் போயின. அரசுக்கு எதிரான கடுமையான ஸ்டேட்மென்ட்டுகளும் வானதியிடமிருந்து வளமாக வந்தன.

இப்படியான சூழலில் மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை கோவையில் போட்டியிட்ட போது பாஜக-வில் சிலர் அவருக்கு போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை. அவர் பின் தங்கியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு கோவை அரசியலில் தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்தார் அண்ணாமலை.

அதற்குக் காரணம், கொங்கு மண்டலத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகள். இதை வைத்துத்தான் அதிமுக அரசியல் செய்து வருகிறது. இந்தத் தொகுதிகளில் தனிக்கவனம் செலுத்தினால் பாஜக-வின் செல்வாக்கை வளர்க்க முடியும் என்பது அண்ணாமலையின் கணக்கு.

இதே கணக்கைப் போட்டுத்தான் செந்தில்பாலாஜியை கோவையில் உட்கார வைத்திருக்கிறது திமுக. அதே கணக்குடன் தான் அண்ணாமலையும் தனது அரசியலை கோவைக்கு மாற்றி இருக்கிறார். அண்ணாமலையின் கோவை கரிசனத்தால் ஏற்கெனவே இங்கு கோலோச்சி வரும் வானதி சீனிவாசனுக்கு முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சமும் அவரது ஆதரவாளர்களுக்கு இருக்கிறது. ஆக, அண்ணாமலை வருகையால் கொங்கு பாஜக இன்னும் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது” என்றனர்.

அதிமுக கூட்டணி இருந்ததால் தான் கடந்த முறை கோவை தெற்கில் வானதி வென்றார். அதனால் அதிமுக-வுடன் கூட்டணி வேண்டும் என்பதில் அவர் இப்போதும் உறுதியாக இருக்கிறார். முன்பு அதிமுக-வை உதறித்தள்ளிய அண்ணாமலையும் இப்போது அதிமுக மீது சிநேகப் பார்வை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.

“கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்” என்று சொல்ல ஆரம்பித்திருக்கும் அதிமுக, ஒருவேளை பாஜக-வுடன் மீண்டும் கைகோத்தால், ஒரே ஊரில் இருக்கும் அண்ணாமலையும் வானதியும் இணக்கமான அரசியல் செய்தால் மட்டுமே பாஜக-வின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் அப்படியில்லாமல், போட்டி அரசியல் செய்தால் பாதகம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது!

SCROLL FOR NEXT