சென்னை: அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த வி.நாராயணனை எண்ணி வியக்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது சமூகவலைதளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ள வாழ்த்தில், “இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோ-வில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
சந்திரயான் 2, சந்திரயான் 3, ஆதித்யா எல்1, ககன்யான் என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2 ஆண்டுகள் பதவி: வி.நாராயணன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இஸ்ரோவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த வி.நாராயணன் இதுவரை ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது இவர் திருவனந்தபுரத்தில் உள்ள எல்பிஎஸ்சி.,யின் (LPSC) இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக, இந்திய விண்வெளித் துறை செயலராக செயல்படுவார் என மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ( ACC ) அறிவித்துள்ளது.
தலைவர்கள் வாழ்த்து: இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானியான அவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுப் பள்ளியில் படித்து, தனது அயராத உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்தவர். அவருடைய வளர்ச்சி மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெற சிறப்புடன் செயல்பட்டவர் வி. நாராயணன்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழகத்தின் பங்கு நீண்டகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி. நாராணயன் இந்திய விண்வெளித்துறையில் மகத்தான சாதனைகளை புரிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரது முயற்சி வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
“இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் வி.நாராயணனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளித் துறையில் இந்தியா ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள நிலையில் புதிய தலைவரான நாராயணன் தலைமையில் புதிய உச்சங்களைத் தொடும் என்று நம்புகிறேன்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்ட வி நாராயணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த வி நாராயணன், இந்தியாவின் கிரையோஜெனிக் இயந்திர வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். நிலவின் தென் துருவப் பகுதியில் ரோவரை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்ற இஸ்ரோவின் தலைவரான சோம்நாத்துக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.