தமிழகம்

பொது இடங்களுக்கு பதிலாக கட்சி கொடி கம்பங்களை வீடுகளில் வைக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை

செய்திப்பிரிவு

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களால் பிரச்சினை வருவதால் அவற்றை பொது இடங்களில் வைக்காமல் வீடுகளில் வைத்துக் கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

மதுரை கூடல்புதூர் பகுதியில் ஏற்கெனவே உள்ள அதிமுக கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிக் கம்பம் நடவும், அதில் கொடியேற்றவும் அனுமதி வழங்க விளாங்குடி அதிமுக நிர்வாகி சித்தன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதேபோல் மதுரை பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதிக்கக் கோரி மாடக்குளம் அதிமுக பிரதிநிதி கதிரவன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதி ஜி.இளந்திரையன் விசாரித்தார். அரசு தரப்பில், தமிழகத்தில் அனுமதியில்லாத கட்சிகள் கொடிக் கம்பங்கள் தொடர்பாக 144 வழக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, கட்சிக் கொடிக் கம்பங்கள் வைப்பதில் போலீஸாரின் பங்கு என்ன? என்றார் அதற்கு, போலீஸாரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.

தொடர்ந்து நீதிபதி, "கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தனி விதிகள், வழிகாட்டுதல்கள் உள்ளதா? என்றார். அரசு தரப்பில், " நகராட்சி சாலைகள், மாநகராட்சி சாலைகள், நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் என சாலைகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. கட்சிக் கொடிக் கம்பம் வைக்க அனுமதி கோரும் சாலை எந்த வரம்புக்குள் வருகிறதோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என உள்ளாட்சி விதிகளில் கூறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் வைக்க எந்த வழிகாட்டுதல்களும், விதிகளும் இல்லாத நிலையில், எவ்வாறு கட்சி கொடிக் கம்பங்கள் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது? அவ்வாறு இல்லாமல் கட்சிக் கொடிக் கம்பங்கள் வைக்கப்படும்போது அந்த இடத்துக்கு சம்பந்தப்பட்ட கட்சியிடம் வாடகை வசூலிக்கலாமே?

பொது இடங்களில் ஏராளமான கட்சிக் கொடிக் கம்பங்கள் உள்ளன. இதனால் ஏராளமான பிரச்சினைகள் எழுகின்றன. பொதுவான இடத்தில் கட்சிக் கொடிக் கம்பம் வைக்க ஏன் அனுமதி கோருகிறீர்கள்? ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் வைத்துக் கொள்ளலாமே? பொது இடம் என்பது பொதுமக்களுக்கானது. பொது இடத்தில்தான் கட்சிக்கொடிக் கம்பங்களை வைக்க வேண்டும் என்றால், பொது இடத்தில் சொந்தமாக இடம் வாங்கி வைத்துக் கொள்ளலாம்? இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT