கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஜே.முத்துக்குமரன் 930 மில்லி கிராம் தங்கத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் செய்து சாதனை படைத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவில் வசிப்பவர் முத்துக்குமரன் (40). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளர். 12 வயதிலிருந்து தந்தையுடன் சேர்ந்து கவரிங் மற்றும் தங்க நகைகள் செய்து வருகிறார். அந்த அனுபவத்தினால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகை மற்றும் பொருள்களை செய்யும் பணியில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
இவர் கடந்த 2020 ஏப்ரலில் 530 மில்லி கிராம் தங்கத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறை, முகக்கவசம், இந்தியா வரைபடம் ஆகியவை அடங்கிய தொகுப்பை செய்தார்.
மேலும் 660 மில்லி கிராம் தங்கத்தில் 2020 ஆண்டு 12 பக்க காலண்டரையும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் 1 கிராம் 420 மில்லி தங்கத்தில் இந்திய நாடாளுமன்ற கட்டட உருவத்தையும்,120 மில்லிகிராம் தங்கத்தில் ஓட்டு விற்பனை இல்லை என்ற பாதகை 20 மில்லி தங்கத்தில் மை வைத்த விரல் உருவத்தையும் செய்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2018 ஆண்டு புகழ்பெற்ற சவுதியில் உள்ள மெக்கா, மதினா உருவங்களை 640 மில்லி கிராமில் 1 செ.மீட்டர் உயரத்தில் தங்கத்திலும், மேலும் அதனுடன் அல்லாஹ் வார்த்தை 10 மில்லி கிராம் தங்கத்தில் செய்துள்ளார்.
சென்ற ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையையெட்டி 2 கிராம் 790 மில்லி கிராம் தங்கத்தில், 1.5 இன்ச் நீளமும்,1 இன்ச் உயரம் மற்றும் அகலத்தில் மிகச்சிறய அளவிலான வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்தும், முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உருவத்தை 3 செமீ உயரத்திலும், 3 செமீ அகலத்திலும் 630 மில்லி கிராமம் தங்கத்திலும் கலைஞர் என்பதை 99 வயதை குறிக்கும் வகையில் 99 மில்லி கிராம் தங்கத்திலும் ஆக மொத்தம் 729 மில்லி தங்கத்தில் செய்துள்ளார். இது அனைவராலும் பராட்டப்பட்டது.
இந்த நிலையில் இன்று(ஜன.5) 2.5 மில்லி மீட்டர் உயரத்தில் 930 மில்லி கிராம் தங்கத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த தேரில் சொர்ணலிங்கமும் உள்ளது. தேர் 900 மில்லி கிராமிலும், சொர்ணலிங்கம் 30 மில்லி கிராமிலும் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொற்கொல்லர் முத்துக்குமரன் கூறுகையில், ''சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத தேரோட்டம் வரும் 12ம் தேதியும், தரிசன விழா வரும் 13ம் தேதியும் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு 930 மில்லி கிராம் தங்கத்தில் சொர்ணலிங்கத்துடன் கூடிய தேரை செய்தேன். இந்த தேர் நான்கு சக்கரங்களுடன் இழுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை 4 நாட்களில் செய்தேன். நடராஜர் கோயிலில் தங்க தேர் இல்லாத நிலையில் தங்க தேர் செய்து கோயில் உள் பிரகாரத்தில் வலம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் இதை செய்துள்ளேன்'' என்றார்.