தமிழகம்

போலீஸாரின் தற்கொலைகளை தடுக்க ‘உளவியல்’ கணக்கீடு: சென்னை காவல் துறை புதிய முயற்சி

இ.ராமகிருஷ்ணன்

போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து பணி செய்வதால் அவர்கள் அதிகளவு மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதனால், காவலர்கள் பலர் மது பழக்கத்துக்கு அடிமையாவதாகவும், தற்கொலை செய்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற துயரங்களை தடுக்கும் நடவடிக்கையாக ‘மகிழ்ச்சி’ என்ற திட்டம் காவல் துறையில் தொடங்கப்பட்டது.

இத்திட்டம் மூலம் தற்கொலை எண்ணம் உடையவர்கள், தொடர்ந்து பணிக்கு வராமல் இருப்பவர்கள், இணையவழி சூதாட்டத்துக்கு அடிமையானவர்கள், மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள், பணியில் நாட்டமில்லாமல் இருப்பவர்கள் மற்றும் குடும்ப பிரச்சினைக்கு ஆளானவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், சென்னை காவல் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது. இதையடுத்து, போலீஸாரின் தற்கொலைகளை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை காவல்துறையின் தலைமையிட போலீஸ் அதிகாரிகள் ஆழமான மற்றும் விரிவான ஆய்வில் இறங்கினர்.

முதல் கட்டமாக ஏற்கெனவே, தற்கொலை செய்து கொண்ட போலீஸாரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களின் குடும்பத்தாரிடம் பேசினர். இறுதி கட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட காவலர் என்ன மன நிலையில் இருந்தார்? அவரின் செயல்பாடு எப்படி இருந்தது? என்பது உட்பட பல்வேறு தகவல்களை பதிவு செய்து கொண்டனர். தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்துக்கும் சென்று உளவியல் நிபுணர்களுடன் தற்கொலை தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசித்தனர்.

அதை அடிப்படையாக வைத்து 20 கேள்விகள் தயார் செய்யப்பட்டது. இவை சென்னையில் உள்ள அனைத்து (சுமார் 23,000) போலீஸாருக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடிக்கடி தலைவலி வருகிறதா? நடுக்கமாகவும், இறுக்கமாகவும், கவலையாகவும் உணர்கிறீர்களா? எல்லாவற்றிலும் ஆர்வத்தை இழந்து விட்டீர்களா? மனதில் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணம் இருந்ததா? விரைவில் சோர்வடைகிறீர்களா? என்பன உட்பட 20 கேள்விகளை போலீஸாரிடம் கொடுத்து ஆம், இல்லை என பதில்கள் பெறப்பட்டு வருகிறது.

அப்படி போலீஸார் அளிக்கும் பதில்களை உளவியல் நிபுணர்கள், மன நல மருத்துவர்களுடன் ஆலோசித்து சம்பந்தப்பட்ட காவலர் தற்கொலை எண்ணத்தில் உள்ளாரா? என்பதை கண்டறிந்து அவருக்கு முன்கூட்டியே தேவையான உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “காவலர்கள் அளிக்கும் பதில்கள் அடிப்படையில் ஏற்கெனவே தற்கொலை எண்ணத்தில் இருந்தாரா? தற்போது இருக்கிறாரா? தற்கொலை முடிவிலிருந்து மீண்டு வந்து விட்டாரா? என கண்டறிந்து தேவைக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். காவல் துறையில் தற்கொலை என்ற நிகழ்வே இருக்கக் கூடாது என்பதே இந்நடவடிக்கையின் நோக்கம்” என்றனர்.

SCROLL FOR NEXT