சென்னை: தென்காசி கோயில் தீ வைப்பு சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரசித்திபெற்ற தென்காசி விசுவநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்த திருப்பணி வேலைகளுக்காகவும் கோயில் கோபுர வேலைகளுக்காகவும் மரங்கள் கொண்டுவரப்பட்டு சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்று காலை ஒரு நபர் கையில் 10 லிட்டர் பெட்ரோலுடன் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து சாரம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்து கோயிலை சேதப்படுத்த முயற்சி செய்துள்ளார். அந்த பகுதியில் உள்ள கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரைப் பிடித்து தடுத்து தீயை அணைத்துள்ளனர்.
பின்பு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைதுறையின் கவனக்குறைவால் பல கோயில்களில் திருட்டு, விக்ரகங்களை சேதப்படுத்துவது, கோயில்களை இடிப்பது என இழிவான சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்து முடிந்த பின்பு குற்றம் செய்தவரை மனநோயாளி என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 10 லிட்டர் கேனை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் வாங்கி வந்து கோயிலுக்குள் நுழைந்து பற்ற வைப்பவர் மனநோயாளியாக இருப்பாரா? கோயிலை தாக்குபவர் அனைவரும் மனநோயாளி என்று கூறுவதும், அப்படிப்பட்ட மனநோயாளிகள் வேற்றுமத ஆலயங்களை சேதப்படுத்தாமல் இந்து கோயில்களை மட்டும் சேதப்படுத்துவதும் சந்தேகத்தை எழுப்புகிறது.
பல பேர் கோயிலை தாக்கிய பின்பு மனநல மருத்துவரை பார்த்து போலியான சான்றிதழ் வாங்குவதாக கேள்விப்படுகிறோம். இந்து சமய அறநிலைத்துறை கோயிலை நிர்வாகம் செய்வதாக கூறிக்கொண்டு, இதுபோன்ற நபர்களால் கோயில் சேதப்படுத்துவதையோ, சிலைகள் திருடப்படுவதையோ தடுக்கும் திறனற்ற துறையாக இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
அறநிலைத்துறை கோயிலை பாதுகாப்பதை விட்டுவிட்டு கோயிலில் உள்ள தங்கத்தை எப்படி உருக்குவது, உண்டியல் பணத்தை எப்படி பெருக்குவது, தரிசன கட்டணம் மூலம் எப்படி வருமானத்தை ஏற்படுத்துவது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. கோயிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன் வருவதில்லை. சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி கோயிலில் ஒருவர் புகுந்து விக்கிரகங்களை சேதப்படுத்தினார். அவரையும் மனநோயாளி என்றனர். அதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் பல கோயில்களின் விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்டன. சேதப்படுத்திய நபரை பிடித்தபோதும் மனநோயாளி என்றனர்.
இந்த நிலையில் கோயிலை காக்கத் தவறும் அறநிலையத்துறையை கோயிலை விட்டு வெளியேற்றுவது நியாயமான விஷயம். இந்த நியாயமான விஷயத்தை இந்து சமய அறநிலைத்துறை செய்வதில்லை. இந்தத் துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர், தன் துறை தான் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுவதாக வாய்ச்சவடால் விடுவது இந்து பக்தர்களை எரிச்சல் அடையச் செய்கிறது. அனைத்து கோயில்களிலும் பரம்பரை காவலாளிகள் என்று முன் காலத்தில் இருந்தனர். அவர்களுக்கு சரியாக கூலி வழங்கி பாதுகாக்க தவறியதால் அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வேறு தொழில் செய்ய சென்று விட்டனர்.
அதன் பின்பு இந்து சமய அறநிலைத்துறை காவலாளிகளை பல கோயில்களில் நியமிக்கவில்லை. இதனால் தான் இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. காவல்துறையும் இது போன்ற நபர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று வழக்கு பதியாமல் விட்டு விடுவதன் காரணமாக இந்த செயல் தொடர்கிறது. தென்காசி கோயில் தீ வைப்பு சம்பவம் யாருடைய தூண்டுதலில் நடந்தது என்பதை காவல்துறை விசாரிக்க வேண்டும். இதன் பின்புலம் என்ன? உள்நோக்கம் என்ன? என்பதை மக்களுக்கு விளக்கும் படியாக விசாரணை அமைய வேண்டும். தமிழக அரசு இனிவரும் காலங்களில் கோயிலைப் பாதுகாக்க அனைத்து கோயில்களிலும் காவலாளிகள் நியமித்து சரியான முறையில் நிர்வாகிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.