அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என பதாகை தூக்கி திமுக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது அதிமுக. இதற்குப் போட்டியாக, ‘யார் அந்த அண்ணன்?’ என போஸ்டர்களை ஒட்டி அதிமுக-வை சீண்டி இருக்கிறது நெல்லை திமுக.
‘அண்ணா... பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா... யார் அந்த அண்ணன்?’ ‘மாதம் ஆயிரம் கொடுத்து அரசாங்கம் எங்கள படிக்க அனுப்புது... பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி - பொண்ணுங்க படிப்பை நிறுத்தப் பார்க்குது’ என்று தமிழ்நாடு மாணவர் மன்றம் - மாணவியர் பிரிவு என்ற பெயரிலும், திமுக-வினர் பெயர் தாங்கியும் நெல்லை மாநகரில் போஸ்டர்கள் கண்ணைப் பறிக்கின்றன.
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறைகளை நினைவூட்டி இந்த போஸ்டர்களை ஒட்டி இருக்கும் திமுக-வினர், ‘பாதம் தாங்கி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது நடந்த அவலம்’ என கூடுதல் விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள். கூடவே, இந்த போஸ்டர்களில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்துக்கு அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு நீதி கேட்ட போராட்ட படத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கந்தசுவாமி பெயரிலும், மத்திய மாவட்ட திமுக சார்பிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன இதுகுறித்து திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கந்தசுவாமியிடம் கேட்டதற்கு, “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் அரசும், காவல்துறையும் உடனுக்குடன் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் மேற்கொண்டு அரசால் என்ன செய்ய முடியும்? இதெல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே இந்தப் பிரச்சினையை வைத்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருநெல்வேலி மாநகரில் ‘யார் அந்த அண்ணன்?’ என்ற கேள்வியுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளேன். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பாலியல் குற்றச் சம்பவங்களை அக் கட்சியினர் மறந்திருக்கலாம். ஆனால், மக்கள் மறக்கவில்லை. அதை நினைவூட்டியிருக்கிறோம்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் ஓராண்டில் மட்டும் 38 ஆயிரம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதுபோல் பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கெல்லாம் யார் சவுக்கால் அடித்துக்கொள்வது?” என்றார்.
இதனிடையே, ‘யார் அந்த அண்ணன்?’ என்ற போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் அணியினர் புகாரளித்துள்ளனர். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணராமல் இப்படி போஸ்டர் புரட்சி நடத்திக் கொண்டிருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை!