சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் (பெசோ) பெற்ற இந்த ஆலையில் உள்ள 35 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலையில் பட்டாசு உற்பத்திக்கான வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது, காலை 9.40 மணி அளவில் உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாயின. அந்த அறைகளில் இருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். சிவகாசி, சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
4 பேர் மீது வழக்கு: இதற்கிடையில், ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்