சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்காக குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம் வாழ் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் படி, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்துக்காக, வீடுவீடாக டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கியது. நியாயவிலைக்கடை பணியாளர்கள் நேற்றுமுதல் வீடுவீடாக சென்று டோக்கன்களை வழங்கினர். வரும் 9-ம்தேதிமுதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்குகிறது.
இந்நிலையில், கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. கரும்பு கொள்முதலுக்கான பணம் மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக விவசாயி
களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணைய முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்ட இணைபதிவாளர்களை தொடர்பு கொண்டோ தங்கள் கரும்பை விற்பனை செய்யலாம். இடைத்தரகர்கள், வியாபாரிகள் விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களை பரப்பினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.