தமிழகம்

ஒரு தொகுதி... ஒரு மாவட்டச் செயலாளர்! - ஆதவ் அர்ஜுனாவின் திட்டத்தை செயல்படுத்தும் திருமா!

என்.சன்னாசி

கட்சிக்குள் அதிகார பரவலை அதிகரிக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் விசிக-வை பலப்படுத்தவும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்பது திருச்சியில் விசிக நடத்திய ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டுக்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனா திருமாவுக்கு சொன்ன யோசனை.

ஆதவை கட்சியைவிட்டு நீக்கிவிட்டாலும் அவர் போட்டுக் கொடுத்த அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இப்போது தீவிரமாகி இருக்கிறார் திருமா. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதி​களில் போட்டி என விசிக நிர்வாகிகள் திமுக-வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்​கிறார் விசிக தலைவர் திருமாவளவன். அதன் ஒரு பகுதி தான் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கும் திட்டம்.

இதுகுறித்து பேசும் விசிக நிர்வாகிகள், “கட்சியை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி தான் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கும் திட்டம். 4 தொகுதி​களுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என இருந்தால் அவர்களால் கட்சியை பெரிய அளவில் வளர்த்​தெடுக்க முடியாது.

ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்றால் அவர்கள் தங்களது பலத்தை கூட்ட​வாவது கட்சி வளர்ச்​சியில் ஈடுபடு​வார்கள்; பொதுப்​பிரச்​சினை​களில் தலையிட்டு கட்சிக்கு மக்கள் மத்தியில் அங்கீ​காரம் சேர்ப்​பார்கள். இது ஆதவ் அர்ஜுனா சொன்ன யோசனை என்றாலும் அதை ஒதுக்​கித்​தள்​ளாமல் செயல்​படுத்த முடிவெடுத்​துள்ளார் திருமா.

முதல்​கட்​டமாக, மாவட்ட வாரியாக மேலிட பார்வை​யாளர்கள் நியமிக்​கப்​பட்​டனர். இவர்கள் ஒவ்வொரு​வரும் தகுதியான 10 பேர் கொண்ட பட்டியலை மா.செ பதவிக்காக தயாரித்து தலைமைக்கு அனுப்​பி​யுள்​ளனர். இதில் பெண்களுக்கும் முக்கி​யத்துவம் அளிக்​கப்​பட்​டுள்ளது.

மாநில அளவில் 34 துணை நிலை பொறுப்பு​களுக்கான நியமனங்கள் தொடர்​பாகவும் பட்டியல் வழங்கப்​பட்​டுள்ளது. திருமா உள்ளிட்ட நிர்வாகிகள் பரிசீலனைக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் தொடர்பான அறிவிப்புகள் சீக்கிரமே வெளியாகும் என எதிர்​பார்க்​கிறோம்” என்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விசிக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அ.செல்​லப்​பாண்​டியன், “குறிப்​பிட்ட ஒரு சாதிக்கான கட்சி என்றில்​லாமல் இப்போது விசிக-வில் அனைத்து சாதியினரும் இணைந்து பணியாற்ற ஆர்வம்​காட்டி வருகிறார்கள். அதிகாரத்தை நோக்கி எங்களது இயக்கம் பயணிக்​கிறது.

இதைத் தடுக்க பல விதமான இடர்பாடு​களும் தரப்படு​கிறது. தலைவரின் வழிகாட்டு​தலோடு அதையெல்லாம் தகர்த்​தெரிந்து முன்னேறிச் செல்கிறோம். ஏற்கெனவே சமூக நீதி, சமத்துவம், சமானிய மக்களுக்கான இயக்கமாக தமிழக அரசியல் களத்தில் பயணிக்கும் எங்களுக்கு ஆட்சி, அதிகார பகிர்வு கிடைக்​கும்போது இன்னும் வலுப்​பெறு​வோம்” என்றார்.

SCROLL FOR NEXT