சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும் அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பாமக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி போராட்டம் நடத்த பாமகவினர் திட்டமிட்டனர். அதையடுத்து சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த எந்தத் திசையில் இருந்து பாமகவினர் வந்தாலும் கைது செய்ய காவல்துறையினர் காத்திருந்தனர். அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பாமக நிர்வாகிகள், பெண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு பசுமைத் தாயகம் சவுமியா அன்புமணி காரில் வந்தார். காவல்துறையினர் அவரைக் கைது செய்ய தயாராக இருந்தனர்.
காரினை மகளிர் போலீஸார் சுற்றி வளைத்தனர். அதனால் காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் சவுமியா அன்புமணி பேசினார். அதையடுத்து காரில் இருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றி சவுமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். பாமகவினர் உரக்க கோஷமிட்டதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.