சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து, புத்தாண்டை நேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கோயில்கள், தேவாலயங்களில் லட்சக்கணக்கானோர் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு பிறப்பு வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. நள்ளிரவு. முதலே ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் இன்புற வரவேற்றனர். கடற்கரைகள், சாலைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், பண்ணை வீடுகளில் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் என நள்ளிரவு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் குதூகலித்தனர்.
அதேபோல் பிரபலமான கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், சென்னையில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர். பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை யில் உள்ள முருகன் அறுபடைகோயில்கள் என அனைத்து முக்கியமான கோயில்களிலும் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.
அதிகாலை நடை திறப்பதற்கு முன்பே பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தர தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட பிரசாதம் நாள் முழுவதும் வழங்கப்பட்டன.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோயில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனை மற்றும் சிறப்பு பாடல் திருப்பலியில் ஏராளாமானோர் பங்கேற்றனர். மதுரை செயின்ட் மேரிஸ் கதீட்ரல் தேவாலயம், தஞ்சாவூர் செயின்ட் பீட்டர் தேவாலயம், கோவை புனித மைக்கேல் தேவாலயம், சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலயம் போன்றவற்றிலும் நள்ளிரவு முதல் விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகளில் கிறிஸ்தவ மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
புத்தாண்டு விடுமுறையையொட்டி, பிரபலமான சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் நேற்று அலை மோதியது. குறிப்பாக கடற்கரைகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் என அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் வருகை தந்து பொழுதுகளை மகிழ்ச்சியாக கழித்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற ட்ரோன் கண்கவர் நிகழ்ச்சி பொதுமக்களுக்கு புத்தாண்டு விருந்தாக அமைந்தது. உதகை, கொடைக்கானல், ஏற்காடு, வால் பாறை உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கும் ஏராளமானோர் சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்தந்த மாவட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, வாகன தணிக்கை, ட்ரோன் மூலம் கண்காணிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டிருந்தது. சென்னையில் மட்டும் 19 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருப்பதியில் 14 மணி நேரம்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிச.31-ம் தேதியே கூட்டம் அதிகரித்ததால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், டீ, சிற்றுண்டி, உணவு வகைகளை ஸ்ரீவாரி சேவகர்கள் மூலம் பரிமாறினர். நேற்று அதிகாலை 2 மணிக்கு திருப்பாவை சேவையும், தொடர்ந்து ஆர்ஜித சேவைகளும் நடைபெற்றன. இதை தொடர்ந்து விஐபி பக்தர்களும், இவர்களைத் தொடர்ந்து சாதாரண பக்தர்களும் சுவாமியை தரிசித்தனர். சர்வ தரிசனத்துக்கு 14 மணி நேரம் வரை ஆனது.