சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வடபழனி முருகன் கோயிலில் திருப்பள்ளி எழுச்சி பாராயணம் செய்யப்பட்டது. இதையடுத்து, சிறப்பு அலங்கார, அபிஷேகம் முடிவடைந்து மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, தியாகராய நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பத்மாவதி தாயார் சந்நிதானம், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர், சீனிவாசப் பெருமாள், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன.
அதேபோல், கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு 11.30 மணி அளவில் சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம், கதீட்ரல் பேராலயம், மிகவும் பழமை வாய்ந்த வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நடந்த சிறப்பு ஆராதனையில் கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.