அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு இதுவரையிலும் எந்த பொதுக்குழுவிலும் அங்கீகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றாததால் தற்போதைய தேதியில் அதிமுகவில் பொதுச் செயலாளர், மாவட்டச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் என எந்த பதவியும் செல்லாது என வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் சூர்யமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த டிச.23 மற்றும் டிச.24 ஆகிய தேதிகளில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சூர்யமூர்த்தி ஆகியோர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் பதில்மனுவில், ‘‘அதிமுக உறுப்பினர் என்ற முறையில் தான் கட்சி விதிகளை திருத்தியதை எதிர்த்தும், பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதிமுகவில் கடந்த 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக பழனிசாமி கூறும்போது, அந்த இருவரும் சேர்ந்து 6.12.21-ம் தேதிக்குப் பிறகு நடத்திய உள்கட்சி தேர்தல் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?
அந்த உள்கட்சி தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும் எப்படி பதவி வகிக்க முடியும் என்பதுதான் எனது கேள்வி. கடந்த 2022 ஜூன் 23-ம் தேதியன்று நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு உள்கட்சி தேர்தலுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் வழங்கி இதுவரையிலும் எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. எனவே கடந்த 2022 ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுவும் செல்லாது என்பதால் அதிமுகவில் பொதுச்செயலாளர், மாவட்டச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் என அனைத்து பதவிகளும் தற்போதைய சூழலில் சட்டரீதியாக செல்லாது. அதேபோல பழனிசாமி தனக்கு சாதகமாக கட்சி விதிகளை திருத்தியதும் செல்லாது. எனவே புதிதாக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தவும் தேர்தல் படிவங்களில் பழனிசாமி கட்சியின் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் கையெழுத்திடக்கூடாது என்றும் அறிவிக்க வேண்டும்" என அதில் கோரியுள்ளார்.