அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியே கசிய தொழில்நுட்ப பிரச்சினையே காரணம் என தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்திருந்தது. அப்போதே, தொழில்நுட்ப பிரச்சினையால் இந்த நிகழ்வு ஏற்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு தொடர்பான மின்னணு கோப்புகளை பராமரிக்கும் தேசிய தகவல் மையத்தின் மூத்த இயக்குநர் ஆர்.அருள் மொழி வர்மன் வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: மாநிலக் குற்ற ஆவண காப்பகம் வழங்கிய பட்டியலின்படி 64, 67, 68, 70, 79 போன்ற முக்கியமான பிரிவுகளின் கீழ் எப்ஐஆர்-களை பொதுவெளியில் யாரும் பார்வையிடாத வண்ணம் பிளாக் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்து பாரதிய நியாய சன்ஹிதாவுக்கு மாற்றியதால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எப்ஐஆர்-ஐ முழுமையாக பி்ளாக் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
இதுதொடர்பான குறியீடுகளை நாங்கள் மறுபரிசீலனை செய்து வருகிறோம். எப்ஐஆர் பக்கத்தை பார்வையிடுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் தடை செய்யும் முக்கிய பிரிவுகள் மற்றும் அதன் துணைப் பிரிவுகளையும் முழுமையாக சரிபார்க்கும்படி மாநிலக் குற்ற ஆவண காப்பகத்தையும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.