தமிழகம்

தமிழக பள்ளி பாட புத்தகத்தில் நல்லகண்ணு வரலாறு: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

செய்திப்பிரிவு

தமிழக பள்ளி பாடப் புத்தகத்தில் நல்லகண்ணுவின் வரலாற்றை இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி, நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகங்களில் தமிழக அரசு சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதே கோரிக்கையை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நல்லகண்ணுவின் வரலாற்றை பாடநூலில் இணைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப் புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT