தமிழகம்

மன்மோகன் சிங் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் இரங்கல்  

அ.முன்னடியான்

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை பாதிப்பால் நேற்றிரவு காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்: “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது. அவர், நாட்டின் மிக உயரிய பதவிகளை அலங்கரித்து, அனைவராலும் போற்றப்பட்ட தலைவராக திகழ்ந்தார். நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் அரசியல் கடந்து இன்றளவும் எல்லோராலும் பாராட்டப்படுகிறது. பேராசிரியராக, பொருளாதார நிபுணராக, ரிசர்வ் வங்கியின் தலைவராக, பிரதமராக அவர் ஆற்றிய பணிகளை நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். “

முதல்வர் ரங்கசாமி: “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுச் செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது. உலகம் போற்றும் பெருமைக்குரிய பொருளாதார வல்லுநராக விளங்கிய மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் சிற்பியாகத் திகழ்ந்தவர். சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் விளங்கிய அவர், இந்திய அரசியலில் கண்ணியம் மிக்க ஒரு தனித்துவமான தலைவர். பத்து ஆண்டுகள் தேசத்தின் பிரதமராக பதவி வகித்த அவர், சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக அனைவருக்குமான வளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர் செயல்படுத்திய திட்டங்களையும் பொருளாதார சீர்திருத்தங்களையும் தேசம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த ஏனையோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். முன்னாள் முதல்வர் நாராயணசாமி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக சேர்ந்து அதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்தார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை உலக அரங்கில் உயர்த்தி, அந்த கதவுகளை எல்லாம் திறந்து வெளிநாட்டு மூலதனத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து, இந்தியா வல்லரசாக வர வேண்டும் என்று வித்திட்டவர். சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக இருக்க வேண்டும் என்று சொல்லி, அதனை அவரும் ஏற்றுக்கொண்டு 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 11 சதவீதம் வளர்ச்சியை பெற்றது அவரது ஆட்சியில் தான். அவரது ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

அவரது வெளியுறவு கொள்கையானது அனைவராலும் பாராட்டப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் பாராட்டும் வகையில் மன்மோகன் சிங் செயல்பட்டார். எனக்கு தந்தையை போல் இருந்து வழிகாட்டிய ஒரு தலைவரை இழந்து தவிக்கிறோம். அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டுக்கே இழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT