திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு. மெட்ராஸ் உருவாவதற்கு முன்பே உருவான வரலாற்று சிறப்பு மிக்க இங்குள்ள ஏரி, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில், 481 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரியை அடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரியாக விளங்கும் பழவேற்காடு ஏரியின் குறுக்கே உள்ளது பழவேற்காடு - லைட் ஹவுஸ்குப்பம் உயர் மட்ட பாலம். பழவேற்காடு பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக சுமார் ஒரு கி.மீ. நீளத்துக்கு கடந்த 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இப்பாலத்தின் இருபுறமும் சுமார் 15 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
இந்த மின் கம்பங்கள் மற்றும் மின் விளக்குகளை பழவேற்காடு, லைட்ஹவுஸ் குப்பம் ஆகிய இரு ஊராட்சி நிர்வாகங்களும் தொடர்ந்து பராமரிக்காததால் மின்கம்பங்கள் ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுந்து வருகின்றன. இதனால், தற்போது சுமார் 10 மின் கம்பங்களே உள்ளன.
அந்த மின் கம்பங்களில் உள்ள மின்விளக்குகளும் பழுதாகி எரியாமல் உள்ளன. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பழவேற்காடு- லைட்ஹவுஸ் குப்பம் இடையே உள்ள உயர் மட்ட பாலம் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி வருகிறது. இதுகுறித்து மீனவ மக்கள் தெரிவிக்கும்போது, “பழவேற்காடு- லைட்ஹவுஸ் குப்பம் பாலத்தில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாலும், மின் விளக்குகள் எரியாததாலும், இப்பாலம் இருளில் மூழ்குகிறது.
இதனால், லைட்ஹவுஸ் குப்பம், கூனங்குப்பம், அரங்கன்குப்பம், திருமலை நகர், வைரவன் குப்பம், கோரைக்குப்பம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள், இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக பழவேற்காடு பஜார் பகுதிக்கு இருட்டில் அச்சத்துடன் பயணித்து வருகிறோம்.
மீனவ மக்களில் சில்லறை விலை மீன் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் அதிகாலை வேளையில் இருளில் பழவேற்காடு மீன் சந்தைக்கு சென்று வரும் நிலை நீடிக்கிறது. இப்படி, பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வரும் நாங்கள் பல முறை மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பழவேற்காடு - லைட்ஹவுஸ் குப்பம் உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.