தமிழகம்

சென்னை - கோடம்பாக்கம் மேம்பால சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

எம். வேல்சங்கர்

சென்னையின் முக்கிய மேம்பாலங்களில் ஒன்றாக கோடம்பாக்கம் மேம்பாலம் இருக்கிறது. பூந்தமல்லி மற்றும் அண்ணா சாலை நோக்கி இருபுறங்களிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த பாலத்தின் வழியாக செல்கின்றனர். ஆற்காடு சாலைக்கும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலைக்கும் இடையில் அமைந்துள்ள இந்த பாலம் 1965-ம் ஆண்டில் 32 அடி அகலத்தில் 623 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணி 1963-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கி, 1965-ம் ஆண்டில் முடிந்து திறக்கப்பட்டது. தற்போது, இது சென்னை மாநகரின் பழமையான மேம்பாலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த பாலத்தை மேம்படுத்தம் விதமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் செல்ல தடைவிதித்து, பாலத்தின் தூண்களை வலுப்படுத்தி உயர்த்தும் நடவடிக்கையும், கான்கிரீட் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றது. இந்த பணி முடிந்தபிறகு, கடந்த 2014-ல் பாலம் திறக்கப்பட்டது. இதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், தற்போது இந்த பாலத்தின் கான்கிரீட் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், சில இடங்களில் கான்கிரீட் சாலையில் பெரிய குழிகள் விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால், கான்கிரீட் கம்பிகள் வழியாக மழை நீர் புகுந்து, பாலத்தின் வலுத்தன்மை குறையவும், பெரிய சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த கான்கிரீட் பாதையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் கூறியதாவது: 60 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு புறநகர் பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உயிர் நாடியாக இந்த பாலம் உள்ளது. இப்பாலத்தின் சேதமடைந்த பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

இதுதவிர, பாலத்தின் கான்கிரீட் சாலையில் வாகன ஓட்டிகள் தடையின்றி செல்ல பாலத்தை அகலப்படுத்த வேண்டும். பாலத்தின் சாலையில் சிலர் விதிமீறி செல்வதை தடுக்க கான்கிரீட் பாதையின் நடுவே பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதை சமூக விரோதிகள் சிலர் உடைத்து சென்றுவிட்டனர். எனவே அந்த பிளாஸ்டிக் தடுப்புகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT