புதுச்சேரி: முதல்வர் உத்தரவிட்டும் தேர்வு எழுத ஹால் டிக்கெட் தராமல் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி நிர்வாகம் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர், முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில் இயங்கி வந்த அரசு மகளிர் பாலிடெக்னிக்கை மகளிர் பொறியியல் கல்லூரியாக மாற்றி, சென்டாக் நிர்வாகம் மூலமாக 2022-23 ம் கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிக்க மாணவிகள் சேர்க்கப்பட்டனர். கல்லூரியில் சேரும் போது சென்டாக் மூலம் சேருவோருக்கு காமராஜர் கல்வி நிதியுதவி புதுச்சேரியில் தரப்படுகிறது.
அதன் அடிப்படையில் மாணவிகள் மகளிர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தனர். கல்லூரி நிர்வாகம் மாணவிகள் கல்லூரியில் சேரும் போது காமராஜர் கல்வி நிதியுதவி (ரூ. 25-ஆயிரம்) இந்த கல்லூரிக்கு பொருந்தாது என்று கூறாமல் 2022-23 மற்றும் 2023-24 ஆண்டு மாணவிகளை கல்லூரியில் சேர்த்துவிட்டு திடீர் என்று கல்லூரி நிர்வாகம் இந்த ஆண்டு 2024-25 முழு கல்விக் கட்டணம் 40ஆயிரத்து 266-ரூபாய் மொத்தமாக கட்டினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கூறுகையில், ''கல்விக்கட்டணம் முழுமையாக செலுத்தினால்தான் ஹால்டிக்கெட் தருவதாக தெரிவித்துள்ளது பற்றி கடந்த வாரம் முதல்வர் ரங்கசாமியிடம் மாணவிகள் முறையிட்டனர். கல்வித்துறைச்செயலரை அழைத்து மாணவிகளிடம் காமராஜர் கல்வி நிதியுதவி கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம். நிதியுதவி தர நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுத அனுமதியுங்கள் என்று குறிப்பிட்டார். கல்வித்துறை செயலரும் கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் தர உத்தரவிட்டார். வரும் 27ம் தேதி தேர்வு தொடங்கவுள்ளது. ஆனால் கல்விக்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு இன்று வரை ஹால்டிக்கெட் தரவில்லை.
குறிப்பாக ஏழை மாணவிகள், பெற்றோர் கடும் மன உளைச்சலில் உள்ளனர். ஆளுநர், முதல்வர், கல்வியமைச்சர் இதில் தலையிட்டு ஹால்டிக்கெட் தர நடவடிக்கை எடுக்கவேண்டும். 2022-23 ஆண்டு முதல் சென்டாக் வழியாக சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் காமராஜர் கல்வி நிதியுதவியை உடனடியாக வழங்க உத்திரவிட வேண்டும்'' என்றார்.