சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 13-வது மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி பரிசு என்ற பெயரில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறுவதாக சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடையாறு மண்டல அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1.22 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக விரைவில் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை செய்யப்படும். விசாரணையில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.