படம்: ம.பிரபு 
தமிழகம்

37-வது நினைவு தினம்: எம்ஜிஆர் நினைவிடத்தில் பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிட வளாகத்தின் நுழைவுவாயில் அருகே பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

இதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, அமைப்பு செயலாளர் வலசை மஞ்சுளா உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் துணை பொதுச்செயலாளர்கள் ஜி.செந்தமிழன், சண்முகவேல் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். வி.கே.சசிகலாவும் தனது ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அரசியல் தலைவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, மக்கள் தொண்டாற்ற அரசியலில் அடியெடுத்து வைத்து, தேர்தல் களம் புகுந்து, தமிழக முதல்வராகப் பதவியேற்று, தமிழக மக்களின் மனங்களை வென்றெடுத்த எம்ஜிஆரை அவரது நினைவுநாளில் போற்றி வணங்குகிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தின் கொள்கைகளை சாமானிய மக்களிடம் கொண்டுசேர்த்தவர் எம்ஜிஆர். நல்லாட்சிக்கான இலக்கணம் வகுத்த ஒப்பற்ற தலைவர். அவர் புகழைப் போற்றி வணங்கி, எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மக்களை மட்டுமே நினைத்து ஆட்சி செய்த மகத்தான மனிதர். வாழ்ந்தபோதும், மறைந்தபோதும் வாழ்வுதரும் வள்ளலாக விளங்கிக் கொண்டிருப்பவர். எம்ஜிஆரின் நினைவு நாளில் அவர்தம் எண்ணங்களை நிறைவேற்ற உறுதியேற்போம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பொதுமக்கள் மீது அன்பும், சமூகத்தின் மீது அக்கறையும் கொண்ட ஒரு சகாப்தமான அமரர் எம்ஜிஆரின் புகழைப் போற்றி வணங்குவோம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நல்லாட்சியை வழங்குவதில் நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்த தலைவர் எம்ஜிஆர். தமிழக மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எம்ஜிஆரின் நினைவுநாளில் அவரது வழியில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்

மநீம தலைவர் கமல்ஹாசன்: நான் குழந்தையாக தவழ்ந்த நேரத்தில் மடி ஒன்றைக் கொடுத்தவர். சிறுவனாக சினிமாவுக்குள் புகுந்த காலத்தில் நட்சத்திரமாக முன்னோடியவர். மக்கள் மனம் கவர்வதில் எனக்கு மானசீகப் பாடம் நடத்திய ஆசிரியர். இப்படி எந்நாளும் மறையாத நினைவுகளைத் தந்த எம்ஜிஆரை இந்நாளில் வணங்குகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT