கூடலூர் பகுதியில் செடிகளில் காணப்படும் காபி பழங்கள். 
தமிழகம்

விளைச்சல் குறைவால் காபி விலை உயர்வு: நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி

ஆர்.டி.சிவசங்கர்

கூடலூரில் விளைச்சல் குறைந்திருந்த நிலையில், காபிக்கு கூடுதல் விலை கிடைத்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக விவசாயிகள் காபி செடி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு 10,700 ஏக்கரில் ரொபஸ்டோ வகை காபி, 5,750 ஏக்கரில் அரபிக்கா வகை காபியைப் பயிரிட்டுள்ளனர். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் காபி செடிகளில் பூ பூக்கும். நவம்பர் முதல் ஜனவரி வரை காபி பழங்கள் பறிக்கும் பணி நடைபெறும். காபி பழங்களைக் காயவைத்து, அதன் உள்ளிருக்கும் பருப்பு காபி பவுடர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

நடப்பாண்டு, காபி பூப்பூக்கும் காலத்தில் கோடை மழை ஏமாற்றியதால், விளைச்சல் குறைந்தது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர். இந்நிலையில், காபி பழம் கிலோ ரூ.70, காய்ந்த காபி கிலோ ரூ.220 முதல் 230, சுத்தம் செய்யப்பட்ட காபி பருப்பு ரூ.400 வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து காபி விவசாயிகள் கூறும்போது, ‘‘நடப்பாண்டு விளைச்சல் குறைவால் காபிக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது. மேலும், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

கூடலூர் காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் கூறும்போது, “பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் காபி செடியில் பூ பூக்கும். அப்போது, கோடை மழை பெய்வதன் மூலம் மகசூல் கிடைக்கும். நடப்பாண்டு, காபி பூ பூத்த மாதத்தில் கோடை மழை ஏமாற்றியதால் மகசூல் குறைந்துள்ளது. இதனால் தேவை அதிகரித்து, கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு போதுமான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT