பழநி: வளர்ப்பு யானைகளை கோயிலுக்கு வழங்க முன் வந்தால் சட்டப்படி ஏற்றுக் கொள்ள தயார் என பழநியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த 192 கிலோ 984 கிராம் தங்க நகைகளை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (டிச.20) காலை நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறநிலையத்துறை சார்பில் கோயில்களின் மேம்பாட்டிற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களை திரட்டும் வகையில் நிலுவையில் உள்ள வாடகை மற்றும் குத்தகை தொகையினை வசூலித்தல், காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்து வருவாய் ஈட்டுதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்ட முடிவுகளின்படி, கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களை பிரித்தெடுத்து, பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கிட ஏதுவாக தமிழகத்தை 3 மண்டலங்களாக பிரித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாலா, ரவிச்சந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
1,000 கிலோ தங்கம் முதலீடு: இக்குழுவினர் மூலம் 13 கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, மொத்தம் 442 கிலோ 107 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5.79 கோடி வட்டித் தொகையாக கிடைக்கப் பெற்று அந்தந்த கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மொத்தமாக 1,000 கிலோ எடை கொண்ட பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யும்போது ஆண்டுக்கு ரூ.12 கோடி வட்டித் தொகையாக கிடைக்கும். ரூ.700 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு கோயில்களின் சொத்து மதிப்பும் உயரும். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பெயரில் 2007-ல் 191 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1.35 கோடி வட்டித்தொகையாக கிடைத்து வருகிறது.
தொகுப்பூதியம் உயர்வு: பழநி முருகன் கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோயில் அறங்காவலர்குழு தீர்மானத்தின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வரப்பெற்றவுடன் நேர்காணல் நடத்தி எவ்வித தவறுக்கும் இடம் அளிக்காமல் தேர்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் மார்ச் மாத இறுதிக்குள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். பழநி கோயில் சார்பில் நடத்தப்படும் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக்கில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை ஏற்கனவே தேர்வு செய்யும்போது இந்து சமய அறநிலையத்துறையின் கல்விப் பிரிவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கவில்லை.
ஆகவே, அவர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாத நிலையில் தான் அவர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியுள்ளோம். கோயில் யானைகளுக்கு கால்நடை மற்றும் வனத்துறை மூலமாக அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவர்களால் அறிவுறுத்தப்படும் உணவு கட்டுப்பாடும் கடைபிடிக்கப்படுகிறது.
கோயில் யானைகள் பராமரிப்பு: 26 கோயில்களில் உள்ள 28 யானைகள் நல்ல முறையில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய வனத்துறை பாதுகாப்பு சட்டப்படி, புதிதாக யானையை வாங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. முறையான அனைத்து அனுமதிகளையும் பெற்று தனது சொந்த பராமரிப்பில் யானைகளை வளர்த்து வருபவர்கள், கோயிலுக்கு வழங்க முன்வந்தால் சட்டப்படி அதனை ஏற்றுக்கொள்வதற்கு துறை தயாராக உள்ளது.
அவை யானைகள் இல்லாத கோயில்களுக்கு வழங்கப்படும். பழநி கோயிலுக்கு புதிய ரோப்கார் அமைப்பது தொடர்பாக அறங்காவலர் குழு மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று அங்கு இயக்கப்படும் ரோப் கார் கட்டமைப்புகளை ஆய்வு செய்து வந்துள்ளனர். அதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு முதல்வர் அனுமதி பெற்று அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.