ஈரோடு: இரண்டு நாள் பயணமாக இன்று (டிச.19) ஈரோடு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் அவருக்கு மருந்து பெட்டகத்தை வழங்கி, நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டம்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொள்வதோடு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப் பணிகள் தொடக்க விழாக்களில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
இதற்காக, இன்று காலை விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சாலை மார்க்கமாக ஈரோடு வருகை தந்தார். அவருக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், விஜயமங்கலம் சுங்கச்சாவடி, பெருந்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கி நடந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் கிராமத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியான சுந்தராம்பாளைச் (55), சந்தித்து, மருந்து பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து தொடர் சேவை சிகிச்சையில் உள்ள வசந்தா (60), என்பவரைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரிடமும் மருத்து பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் ஓய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்கம் மஹாலில் நடக்கும் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதைத்தொடர்ந்து, தி.மு.க. கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரக்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
நாளை (டிச.20) காலை 10 மணிக்கு ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையைத்தில் நடக்கும் அரசு விழாவில், பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.951.20 கோடி மதிப்பீட்டில் 559 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.133.66 கோடி மதிப்பீட்டிலான 222 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இதன் தொட்ர்ச்சியாக, ரூ.284.2 கோடி மதிப்பீட்டில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள்.
இந்நிகழ்விற்கு பிறகு கோவை செல்லும் முதல்வர், அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக சோலார், புதிய பேருந்து நிலைய வளாகப் பகுதியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி, கோவை டி.ஐ.ஜி சரவண சுந்தர், ஈரோடு எஸ்பி ஜவகர் தலைமையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.