கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதி நீர்நிலைகளில் கொட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையெலெடுத்ததை அடுத்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத் துறையினர் என அனைத்துத் தரப்பும் சோம்பல் முறித்து களத்தில் இறங்கியுள்ளனர்.
கழிவுகளை கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனும் எச்சரித்துள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகவே கேரளத்தின் கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மாறிவிட்டன. இதேபோல் கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் கேரள கழிவுகளை அத்துமீறி கொட்டி வருகிறார்கள். இதை நிறுத்த எத்தனை முறை தமிழக அரசு கடிதம் எழுதினாலும் கேரளத்தின் அத்துமீறல் நின்றபாடில்லை.
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட குவாரிகளில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் கனிம வளங்கள் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அரிசி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வாகனங்களில் அனுப்பப்படுகின்றன. இந்த வாகனங்கள் எல்லாம் அங்கிருந்து திரும்பும் போது அவற்றில் தேவையற்ற கழிவுகளையும் ஆபத்தை விளைவிக்கும் மருத்துவக் கழிவுகளையும் மனசாட்சியே இல்லாமல் ஏற்றி அனுப்புகிறார்கள்.
காசுக்காக இவற்றை ஏற்றி வரும் தமிழகத்து வாகன ஓட்டிகள் அவற்றை தமிழக எல்லைக்குள் இரவோடு இரவாகக் கொண்டு வந்து மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் கொட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். எல்லையோர சோதனைச் சாவடியில் இருப்பவர்களை மாமூலாக ‘கவனித்து’ விடுவதால் அவர்களும் இதைக் கண்டு கொள்வதில்லை என்கிறார்கள்.
இப்படி கழிவுகளுடன் வரும் வாகனங்களை சிலசமயம் பொதுமக்கள் சிறைபிடிக்கிறார்கள். அப்போது வாகன ஓட்டிகள், கழிவுகளை கொட்டியவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனாலும் பிரச்சினைக்கு முடிவில்லை.
தங்கள் மாநிலத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க நினைக்கும் கேரளத்தினர் தமிழகத்தை குப்பை கிடங்காக்க துணிவதற்கு, இங்குள்ளவர்களும் துணைபோவதுதான் வேதனை. இப்படி கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் விடுவதால் இந்த அத்து மீறல் வழிவழியாக தொடர்கிறது.
இதுகுறித்துப் பேசிய நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன், “எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையை கடுமையாக்கி, நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்தி திறம்பட செயல்பட்டால் இந்த அத்துமீறலை தடுத்துவிடலாம். கழிவுகளுடன் வரும் வாகனங்கள் பிடிபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் சட்டத்தில் உள்ள 5 ஆண்டு சிறை, அல்லது ரூ.1 லட்சம் அபராதம் என்ற விதியை மேலும் கடுமையாக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றில்லாமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளே நேரடியாக களத்தில் இறங்கி கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுகளைக் கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நிரந்தரமாக தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், கேரளத்தின் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றுவதற்கான செலவை கேரள அரசு ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ள தீர்ப்பாயம், இது தொடர்பாக கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயரதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தென்மாவட்ட வளங்களால் வாழ்வு பெறும் கேரளம் அதற்கு கைம்மாறாக ஆபத்தான குப்பைகளை அனுப்பும் கொடுமையை தமிழக அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் இரும்புக் கரம் கொண்டு தடுக்கட்டும்!