தமிழகம்

அமித் ஷா பேசியதை திரித்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம்: தமிழக பாஜக குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

அமித் ஷா பேசியதை திரித்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

அமித் ஷா பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பாஜகவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: அம்பேத்கர் குறித்து அமித்ஷா தவறாக பேசவில்லை. அவர் பேசியதில் ஒன்றிரண்டு வார்த்தைகளை எடுத்து விவாதிக்கின்றனர். முருகனைப் போல அம்பேத்கரையும் நான் கடவுளாகத்தான் பார்க்கிறேன். அவரது கொள்கைகளை ஏற்று நான் அரசியல் செய்கிறேன். அவரது பெயரை உச்சரிக்கும் அனைத்து கட்சியினரும் அவ்வாறு செய்கின்றனரா என்பதைதான் அவர் கேட்டார். அம்பேத்கரை காங்கிரஸ் எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தியது. அமைச்சரவையில் இருந்து அவர் ஏன் விலகினார். அம்பேத்கரை ஏன் தேர்தலில் தோற்கடித்தனர், அவருக்கு பாரத ரத்னா விருதை தாமதப்படுத்தியது ஏன் போன்றவற்றுக்கு காங்கிரஸ் கட்சிதான் விளக்கம் அளிக்க வேண்டும்.

பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: அமித் ஷா பேசியதை திரித்து வழக்கம்போல அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்த கட்சி காங்கிரஸ். அவருக்கு தேர்தல் முகவராக பணியாற்றிய கட்சி ஜனசங்கம். அந்த காலகட்டம் முதலே அம்பேத்கரை பாஜக போற்றி வருகிறது. பாஜக ஆட்சியில் சிறுபான்மை மதத்தை சேர்ந்த அப்துல் கலாம், பட்டியலினத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த், பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு ஆகியோர் குடியரசுத் தலைவராகி உள்ளனர். ஒடிசாவில் பழங்குடியினத்தை சேர்ந்த முதல்வர், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் பட்டியலினத்தை சேர்ந்தோர் துணை முதல்வர் ஆகியுள்ளனர். மத்திய அமைச்சரவையில் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதும் மோடி அரசில்தான். இதுதான் உண்மையிலேயே டாக்டர் அம்பேத்கரை போற்றுவது. அம்பேத்கர் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மதிப்பும், மரியாதையும் இருந்தால் உடனடியாக பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும். திமுக பொதுச் செயலாளராக பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துபவர்களுக்கு பட்டியலின மக்கள் உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT