ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 346 கி.மீ நீளமுள்ள 114 சாலைகள், 81 சிறுபாலங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றைச் சீரமைக்க ரூ.132.85 கோடி தேவைப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30-ம் தேதி புயல் கரையைக் கடந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் 55 செ.மீ. மழை பெய்தது. மாவட்டத்தையே புரட்டிப்போட்ட இந்த பெருமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகள், சிறுபாலங்கள் சேதமடைந்தன. மேலும், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, அரியலூர், விருத்தாசலம், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, பழநி, பொள்ளாச்சியில் இருந்து நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, சாலைகளை சீரமைத்தனர். மேலும், சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஃபெஞ்சல் புயலால் பெய்த அதிகனமழையால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, விழுப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம் மேற்கு நெடுஞ்சாலைத் துறையினரால் பராமரிக்கப்படும் 346.65 கி.மீ. நீளமுள்ள 114 சாலைகள், 81 சிறுபாலங்கள் மற்றும் அவற்றின் அணுகு சாலைகள் என 142 சாலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை தற்காலிகமாக சீரமைக்க ரூ 13.24 கோடி, நிரந்தரமாக சீரமைக்க ரூ 119.60 கோடி என மொத்தம் ரூ 132.85 கோடி தேவைப்படும். இந்த தொகையை அரசிடமிருந்து பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடனடி தேவைக்கான தற்காலிக சீரமைப்புப் பணிகள் உதவி செயற் பொறியாளர் தனராஜன், உதவிப் பொறியாளர் விஜயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.