உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கலாமணி (இடது) - மாணிக்கம் (வலது) 
தமிழகம்

திருச்சி அருகே பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருச்சி கே.கே.நகர் அடுத்த ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மின்மாற்றியை (டிரான்ஸ்பாரம்) மாற்றி அமைக்கக் கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர் கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், மின்மாற்றியை மாற்றியமைக்கும் பணி இன்று நடைபெற்றது. அப்போது, அருகிலிருக்கும் 11 கேவி உயர் மின் அழுத்தக் கம்பத்திலிருந்து மின் மாற்றிக்கு வரும் மின் கம்பியை துண்டிப்பதற்காக மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, மருங்காபுரி, கல்லுப்பட்டியைச் சேர்ந்த கலாமணி (42) என்பவர் மின் கம்பத்தில் ஏறினார். மின் கம்பத்தின் கீழ் பகுதியில் மணப்பாறை அருகே வேங்கைக்குறிச்சி அருணாம்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் (33) என்பவர் நின்று கொண்டிருந்தார். இருவரும் மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள்.

மின் கம்பியை துண்டிக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்ததில் கலாமணி மின் கம்பத்தில் தொங்கியபடியே கருகி பரிதாபமாக உயிரிழந்தார். கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கீழே நின்று கொண்டிருந்த மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மின்வாரிய அதிகாரிகள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணிக்கத்தை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிஐடியு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் உறவினர்கள் போராட்டம்

மின் கம்பத்தில் தொங்கியபடியே உயிரிழந்த கலாமணியின் உடலை திருச்சி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்டனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணிகண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலாமணிக்கு கூலி வேலை பார்க்கும் மணிமேகலை என்ற மனைவியும், திருமணமான ஒரு மகள் உள்பட 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

மாணிக்கத்துக்கு சித்ராதேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உயிரிழந்த இரண்டு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் சிஐடியு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் கூறியது: “திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரிங் ரோடு அருகில் தனியார் நிறுவனத்திற்காக மின்மாற்றியை மாற்றி அமைப்பதற்காக கே.கே.நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் வாய்மொழியாக உத்தரவிட்டு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை 11 கே.வி (11 ஆயிரம் கிலோ வாட்) மின்பாதையில் எவ்வித மின்தடை பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாமல், மின்சாரம் நிறுத்தப்பட்டதை உறுதி செய்யாமல் வேலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதனால் கலாமணி, மாணிக்கம் ஆகிய இரண்டு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களும் உயிரிழந்தனர். 2 மணி நேரம் கழித்தே தீயணைப்பு துறையினர் வந்து கலாமணி உடலை மீட்டுள்ளனர். மின்சாரம் தாக்கி சுமார் 2 மணி நேரத்துக்கு பின்பு தான் மாணிக்கத்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது கண்டிக்கத்தக்கதாகும். இச்சம்பவம் நடந்து சுமார் ஐந்து மணி நேரம் ஆகியும் மின்வாரிய அதிகாரிகள் ஒருவர் கூட உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற வரவில்லை. இதை கண்டித்தும், இறந்து போனவர்களின் குடும்பத்தினருடன் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதன் பின்னரே இறந்தவர்களின் உடலை பெற்றுக் பெற்றுக் கொள்ளப்படும்” என்றார். இதையடுத்து, போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT