சென்னை: "இதுவரை 13 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி, 442 கிலோ 107 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டிகளாக பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5.79 கோடி வட்டித் தொகையாக கிடைக்கப் பெற்று அந்தந்த திருக்கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது" என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று (டிச.18) ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ முன்னிலையில் கோவை மாவட்டம், ஆனைமலை, மாசாணியம்மன் திருக்கோயிலில், அத்திருகோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பயன்பாட்டில் இல்லாத 28 கிலோ 906 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் பொள்ளாச்சி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தார்.
பின்னர், பொள்ளாச்சி, பெடரல் வங்கியின் சார்பில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான மின்கல ஊர்தியினை திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பேரூர், பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில் மற்றும் மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தமிழக முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் பயன்பாட்டில் இல்லாத பொன் இனங்களை ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்து வருவாய் ஈட்டுதல் என பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பல ஆண்டுகாளக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் இருந்த தங்க முதலீட்டு திட்டத்தினை புதுப்பிக்க முதல்வரின் உத்தரவைப் பெற்று, இதுவரை 13 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி, 442 கிலோ 107 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு ரூ.5.79 கோடி வட்டித் தொகையாக கிடைக்கப் பெற்று அந்தந்த திருக்கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து கடந்த 12-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்ற ஆனைமலை, மாசாணியம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ முன்னிலையில் கல், அரக்கு, அழுக்கு நீக்கி, பக்தர்கள் முன்னிலையில் எடையிட்டு 28 கிலோ 906 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்துள்ளோம். இந்த பலமாற்றுப் பொன் இனங்கள் இரு தினங்களில் மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உருக்கி பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்படும்.
அதேபோல பழனி, சமயபுரம், திருவேற்காடு, நாமக்கல் போன்ற திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 700 கிலோ பலமாற்றுப் பொன் இனங்கள் இந்த மாத இறுதிக்குள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பொன் இனங்களும் உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டால் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.10 கோடி திருக்கோயில்களுக்கு வட்டியாக கிடைக்கப்பெறும். இப்படி உபரியாக திருக்கோயில்களுக்கு வருமானம் கிடைப்பது தடைபட்டிருந்ததை நீக்கி செயல்படுத்தியது திராவிட மாடல் அரசாகும்.
பேரூர், பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு வருகின்ற 2025 பிப்ரவரி மாதம் 10-ம் தேதி குடமுழுக்கு நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு விரைவில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படும். மருதமலை, சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு 2025 ஏப்ரல் மாதம் 4-ம் தேதி குடமுழுக்கு நடத்திடும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.