கோப்புப்படம் 
தமிழகம்

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத் தாழ்வு பகுதி காரணமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய வங்க கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும்.

இதனால் 19-ம் தேதி வரை தமிழக, புதுவை கடலோர பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே புதுவை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். புதுவை கடற்பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ளலாம். வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து கவனித்து வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT