புதுச்சேரி: புதுச்சேரியில் ஜனவரி முதல் மீண்டும் ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர். அணியாதோருக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு எடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் விபத்துகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த 2017-ல் டூவீலர்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் உத்தரவிடப்பட்டது. அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டம் திரும்ப பெறப்பட்டது. அதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2022-ல் நவம்பரில் மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இத்திட்டத்தை ரத்து செய்ய பல்வேறு தரப்பினர் மக்கள் பிரதிநிதிகள் முதல்வரிடம் நேராக சென்று வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து ஹெல்மெட் அணிவதை போக்குவரத்து போலீஸார் கட்டாயப்படுத்தவில்லை.
புதுச்சேரியில் சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் மீண்டும் ஹெல்மெட் திட்டத்தை மீண்டும் கொண்டு வர போக்குவரத்து போலீஸார் முடிவு எடுத்துள்ளனர். வரும் ஜனவரி 2025 முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிந்துதான் டூவீலர் ஓட்டவேண்டும் என போக்குவரத்துத் துறை அறிவித்து போக்குவரத்து காவல்நிலையங்களில் அறிவிப்புகளை வைத்துள்ளது. மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் விளக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த துவங்கியுள்ளனர்.