10 மாதத்தில் ஒரு கோடி பேரை கட்சியில் சேர்த்திருப்பதாக விஜய்யின் தவெக தம்பிகள் மார்தட்டி நிற்கும் அதேவேளையில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக ஆங்காங்கே புலம்பல்களும் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. தவெக-வுக்கு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஜனவரி தொடக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
தவெக கட்சி மாவட்டங்கள் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான செயலாளர்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதில், விஜய் மக்கள் இயக்கத்தில் செம்மையாகச் செயல்பட்டவர்களுக்கு தவெக-வில் உரிய முக்கியத்துவம் கொடுத்து பதவிகளை வழங்க வேண்டும் என்பது ஆனந்துக்கு விஜய் தந்திருக்கும் அட்வைஸ்.
இதை நம்பி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்கள், தங்களது தொகுதியில் கட்சிப் பணிகளில் தீவிரம்காட்டி வருகிறார்கள். ஆனால், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்களுக்கு, அதே மாவட்டத்தில், மாவட்டச் செயலாளர் பதவியை வழங்காமல், வேறு மாவட்டத்தில் அவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க புஸ்ஸி ஆனந்த முடிவுசெய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், புஸ்ஸி ஆனந்த் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் சிலர், “விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து மாவட்ட தலைவர்களாக இருக்கும் நாங்கள் எங்கள் பகுதியில் மக்கள் சேவை செய்து பெயரெடுத்து வைத்திருக்கிறோம். எங்கள் பகுதியில் எங்களுக்கான ஒரு வலுவான டீமையும் உருவாக்கி வைத்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட எங்களை எங்களுக்குப் பரிச்சயமான பகுதிகளை விட்டுவிட்டு வேறு மாவட்டத்துக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளார் புஸ்ஸி ஆனந்த். அப்படி நியமிக்கப்பட்டால் புதிய இடத்தில் நம்பிக்கையான ஒரு டீமையும் வலுவான கட்சிக் கட்டமைப்பையும் உருவாக்குவது கஷ்டமாகிவிடும்.
அதுமட்டுமல்லாது, எங்களது வருகையால் அங்கு ஏற்கெனவே களத்தில் இருக்கும் மன்றத்தினருக்கும் நெருடல் ஏற்படலாம். சும்மாவே ஒரு மாவட்ட நிர்வாகிகளை இன்னொரு மாவட்ட நிர்வாகிகளுக்கு பிடிப்பதில்லை. அப்படி இருக்கையில், நிர்வாகிகளை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவது கட்சிக்கு நல்லதல்ல.
இதுகுறித்து தலைவரிடம் எடுத்துச் சொல்லலாம் என நினைத்தாலும், பொதுச்செயலாளரை மீறி, தலைவரை சந்திக்க முடியவில்லை. பல தகவல்களை நேரடியாக தலைவரிடம் சொல்ல முற்படும்போது, பொதுச்செயலாளர் அதற்குத் தடங்கலாகவே இருக்கிறார். ஒருவேளை, அந்தந்த மாவட்டங்களின் மன்றத் தலைவர்களுக்கு அவர்களது மாவட்டத்திலேயே செயலாளர் பதவிகளை வழங்காமல், வேறு மாவட்டத்தில் வழங்கினால், தலைவர் வீட்டின் முன் போராட்டம் நடத்தி இந்த விஷயத்தை அவரின் கவனத்துக்கு கொண்டுபோவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றனர்.
மாவட்டத் தலைவர்களின் இந்த மனப்புழுக்கம் குறித்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் விளக்கம் கேட்க, அவரை தொலைபேசியில் அழைத்தோம். பல முறை தொடர்பு கொண்டும், அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.